< Back
மாநில செய்திகள்
பாலியல் குற்றவாளிகளுக்கு பரிவு காட்டும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும்- கே.எஸ்.அழகிரி
மாநில செய்திகள்

பாலியல் குற்றவாளிகளுக்கு பரிவு காட்டும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும்- கே.எஸ்.அழகிரி

தினத்தந்தி
|
24 Aug 2022 2:13 PM IST

பாலியல் வன்கொடுமை குற்றத்தைச் செய்தவர்களுக்குப் பரிவு காட்டும் மோடி அரசுக்கு உரிய பாடத்தைப் புகட்ட வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவை நாடே கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிற நேரத்தில், பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டவர்களுக்கு குஜராத் மாநில பா.ஜ.க. அரசு தண்டனை குறைப்பு வழங்கியது இந்திய வரலாற்றில் கரும்புள்ளியாக அமைந்துவிட்டது. ஆட்சியும், அதிகாரமும் தங்களிடம் இருக்கிற ஆணவப் போக்கின் காரணமாக, எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற பா.ஜ.க.வின் எதேச்சதிகார மனப்பான்மை இதன்மூலம் வெளிப்பட்டுள்ளது.

2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரம் நிகழ்ந்த போது 30 பேர் கொண்ட கும்பல் 21 வயது நிரம்பிய 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானுவை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவரது தாயார் மற்றும் 3 பெண்கள் உள்ளிட்ட 7 பேர் கொலை செய்தனர். இவர்களில் பில்கிஸ் பானுவின் 3 வயது மகளும் ஒருவர். இந்த வழக்கில் குஜராத்தில் நீதி கிடைக்காது என்பதால், உச்சநீதிமன்ற ஆணையின்படி வழக்கு விசாரணை மும்பையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 11 பேருக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டு உறுதி செய்தது. இதனை எதிர்த்து 11 குற்றவாளிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இறுதியாக உச்ச நீதிமன்றமும் 2019 இல் தள்ளுபடி செய்தது. அனைத்து நீதிமன்றங்களாலும் தண்டனை உறுதி செய்யப்பட்ட குற்றவாளிகளைத் தான் குஜராத் பா.ஜ.க. அரசு விடுதலை செய்திருக்கிறது. இதை எதிர்த்து சமூகநல ஆர்வலர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு பரிசீலனைக்கு வருவது சற்று ஆறுதலைத் தருகிறது.

கடந்த 2012 ஆம் ஆண்டு, டெல்லியில் நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட பிறகு, பெண்களுக்கு எதிரான வன்முறையை இந்திய நீதித்துறையால் மிகக் கடுமையாகப் பார்க்க நேரிட்டது. இந்தச் சூழலில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை பா.ஜ.க. அரசு தண்டனை குறைப்பின் மூலம் விடுவித்தது பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மிகக் கொடூரமான அநீதியாகும். விடுதலை செய்யப்பட்ட 11 குற்றவாளிகளையும் சிறைச் சாலைக்கு வெளியே பா.ஜ.க.வினர் மாலை அணிவித்து மிகப் பெரிய வரவேற்பு அளித்ததை விடக் கொடுமையான நிகழ்வு வேறு எதுவும் இருக்க முடியாது.

அதேநேரத்தில், பில்கிஸ் பானுவுக்கு நீதி கேட்டு போராடிய தீஸ்தா செதல்வாட், ஆர்.பி. ஸ்ரீகுமார், சஞ்ஜீவ்பட் ஆகியோர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுவரை இவர்களுக்கு ஜாமின் கிடைக்கவில்லை. இன்று வரை அவர்கள் வேறு எந்த குற்ற வழக்குகளிலும் தண்டிக்கப்பட்டவர்கள் அல்ல. எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் வகையில் இவர்கள் மூவரும் பெரும் சதியில் ஈடுபட்டதாகவும், அவர்கள் சிறையில் இருக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்ததால் இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்காக நீதி கேட்டுப் போராடியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், வன்கொடுமை குற்றத்திற்காக நீதிமன்றங்களாலேயே தண்டிக்கப்பட்டவர்களை குஜராத் பா.ஜ.க. அரசு விடுதலை செய்திருக்கிறது. பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பு அமைப்பான விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே இத்தகைய சலுகை வழங்கப்பட்டுள்ளது.

குஜராத் கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் படுகொலை செய்யப்பட்ட போது, முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராகவும், மாநில அமைச்சராக இருந்த அமித்ஷா தற்போது உள்துறை அமைச்சராகவும் பதவி வகிக்கிறார்கள். அன்று நடைபெற்ற படுகொலைக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை. ஆனால், பில்கிஸ் பானுவை கூட்டுப் பலாத்காரம் செய்து 7 பேரை படுகொலை செய்தவர்களை நீதிமன்றம் தண்டித்த பிறகும், கருணை காட்டி தண்டனை குறைப்பு செய்வதை விட ஜனநாயக சட்டவிரோதச் செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. பெண்களுக்கு எதிரான இத்தகைய பாலியல் வன்கொடுமை குற்றத்தைச் செய்தவர்களுக்குப் பரிவு காட்டும் மோடி அரசுக்கு உரிய பாடத்தைப் புகட்ட வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்