திண்டுக்கல்
விவசாயி வீட்டை இடித்த கும்பல்
|வடமதுரை அருகே இடப்பிரச்சினை காரணமாக விவசாயியின் வீட்டை கும்பல் ஒன்று இடித்தது.
வடமதுரை அருகே உள்ள வி.கே.எஸ்.நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 51). விவசாயி. இவரது வீட்டின் அருகே, நாமக்கல்லை சேர்ந்த செந்தில் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இவர்களுக்கிடையே கடந்த சில ஆண்டுகளாக இடப் பிரச்சினை இருந்து வருகிறது. இந்தநிலையில் ராமசாமி வீட்டில் யாரும் இல்லாத போது, செந்தில் தரப்பினர் பொக்லைன் எந்திரத்தை கொண்டு வீட்டை இடித்து தரை மட்டமாக்கியதாக தெரிகிறது. இதையறிந்த ராமசாமி, அவர்களிடம் தட்டிக் கேட்டபோது செந்தில் தலைமையிலான கும்பலை சேர்ந்தவர்கள், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் ராமசாமி புகார் அளித்தார். அதில் தனது வீட்டை இடித்ததோடு அங்கிருந்த நகை, பணம் மாயமாகி விட்டதாக குறிப்பிட்டிருந்தார். இதேபோல் செந்தில் தரப்பினர் கொடுத்த புகாரில், தங்களது இடத்தை சுத்தம் செய்ய முயன்றபோது ராமசாமி மற்றும் அவரது உறவினர்கள் தங்களை தாக்கியதாக கூறியிருந்தனர். அதன்பேரில் இரு தரப்பையும் சேர்ந்த செந்தில், முருகன், தங்கராஜ், ராமசாமி, மனோகரன் உள்பட 8 பேர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.