< Back
மாநில செய்திகள்
சாலையில் சென்ற மினிவேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
மாநில செய்திகள்

சாலையில் சென்ற மினிவேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

தினத்தந்தி
|
23 Jun 2022 4:26 PM IST

சென்னையில் சாலையில் சென்ற மினிவேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆவடி,

சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவருக்கு சொந்தமான மினிவேனை ஆவடி அடுத்த கன்னியம்மன் நகரை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது28) என்பவர் கடந்த 3 நாட்களாக வாடகைக்கு ஓட்டி வந்தார்.

இந்நிலையில் இன்று காலை விஜயகுமார் 2 பெண்கள் 2 ஆண்கள் 1 கைக்குழந்தை உட்பட 5 பேரை வண்டியில் ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் செல்வதாக கூறி சென்றுகொண்டிருந்தார். அப்போது பட்டாபிராம் அடுத்த நெமிலிச்சேரி அருகே சி.டி.எச் சாலையில் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென வாகனத்தின் முன்பக்கம் என்ஜினில் இருந்து புகை கிளம்பி தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.

இதையடுத்து பதறிப்போன விஜயகுமார் உடனடியாக சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு வண்டிக்குள் இருந்த 5 பேரையும் கீழே இறக்கிவிட்டு அவரும் இறங்கி விட்டார். சிறிது நேரத்தில் என்ஜினில் இருந்து கிளம்பிய தீயானது வண்டி முழுவதுமாக எரிய ஆரம்பித்தது.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் தண்ணீரை கொண்டு வந்து வாகனத்தின் மீது ஊற்றினர். மேலும் தகவல் கிடைத்து பூந்தமல்லியில் இருந்து தீயணைப்பு படை வீரர்களும் வந்தனர். அதற்குள் வாகனம் முழுவதுமாக தீயில் எரிந்து எலும்பு கூடானது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்