கடலூர்
தறிகெட்டு ஓடிய மினி பஸ் மின்கம்பத்தில் மோதி புதருக்குள் புகுந்தது
|சிதம்பரம் அருகே தறிகெட்டு ஓடிய தனியார் மினி பஸ் மின்கம்பத்தில் மோதி புதருக்குள் புகுந்தது. இதனால் அச்சம் அடைந்த பயணிகள் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
சிதம்பரம்
தனியார் மினி பஸ்
சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று காலை தனியார் மினி பஸ் ஒன்று புறப்பட்டு முட்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. சிதம்பரம் ஓமகுளம் பகுதியை சேர்ந்த ரியாத்துல்லா(வயது 24) என்பவர் பஸ்சை ஓட்டினார். லால்புரம் ஊராட்சிக்குட்பட்ட முத்து மாரியம்மன் கோவில் அருகே வந்தபோது அங்கிருந்த வேகத்தடையை கவனிக்காமல் டிரைவர் பஸ்சை வேகமாக இயக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய பஸ் சாலையோரம் உயர் மின் அழுத்த மின்கம்பிகளை தாங்கி பிடித்து நின்ற மின்கம்பத்தில் மோதி அருகில் உள்ள முட்புதருக்குள் புகுந்தது. இதனால் திடுக்கிட்ட பஸ்சில் இருந்த பணிகள் கூச்சல் எழுப்பினர்.
மின்கம்பம் சேதம்
பஸ்மோதிய வேகத்தில் மின்கம்பம் உடைந்து சேதம் அடைந்தது. மின்கம்பிகள், தெரு மின் விளக்கு ஆகியவை அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்தன. மின்கம்பிகள் பஸ்சின் மேல் உரசாமல் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்துவிட்டு உடைந்த மின் கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நட்டு அறுந்த மின்கம்பிகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த விபத்து குறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.