பால் பாக்கெட் எடை விவகாரம் - ஆவின் நிர்வாகம் விளக்கம்
|ஆவின் பால் பாக்கெட் எடை குறைவாக இருந்தால், மாற்று பால் பாக்கெட் வழங்கப்படும் என ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை,
ஆவின் பால் பாக்கெட்டில் குறைவான எடையில் பால் பாக்கெட் விநியோகிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இதன் அடிப்படையில், மத்திய பால் பண்ணையில் இருந்து உதவி பொது மேலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பொறுப்பாளர் தசரதனிடம் நேரில் சென்று விசாரித்ததாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அப்போது, ஒரு பால் பாக்கெட் மட்டும் எடை குறைவாக இருந்ததாகவும், உடனடியாக மாற்று பால் பாக்கெட் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
நுகர்வோர்களின் நலன் பேணும் வகையில், தரம் மற்றும் அளவுகள், எவ்வித வேறுபாடுமின்றி பால் விநியோகம் செய்வதில் ஆவின் நிறுவனம் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயந்திர தொழில்நுட்பம் காரணமாக ஏதேனும் அளவு குறை இருப்பின், உடனடியாக மாற்று பால் பாக்கெட்டுகள் வழங்கப்படும் என்று ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், நுகர்வோருக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் 24 மணி சேவை கட்டணமில்லா எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளது.