அரியலூர்
ஆசிரியைக்கு, ரூ.1.98 லட்சத்தை மருத்துவ காப்பீட்டு நிறுவனம் வழங்க உத்தரவு
|ஆசிரியைக்கு, ரூ.1.98 லட்சத்தை மருத்துவ காப்பீட்டு நிறுவனம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தாமரைக்குளம்:
ஆசிரியை
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் பாரதி. இவர், தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்ட சந்தாதாரர் ஆவார்.
புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நிர்வகிக்கும் பணியை அரசின் சார்பில் எம்.டி. இந்தியா ஹெல்த் இன்சூரன்ஸ் டி.பி.ஏ. பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் செய்து வருகிறது. இத்திட்டத்துக்கான காப்பீட்டு சேவையை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்குகிறது.
வழக்கு
இந்நிலையில் பாரதியின் கணவர் சுவாமிநாதனுக்கு, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவ சிகிச்சைக்கான செலவை மருத்துவ காப்பீட்டு நிறுவனம் முழுவதுமாக தர மறுத்து விட்டதால், அந்நிறுவனத்தின் மீது அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பாரதி வழக்கு தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ராமராஜ் மற்றும் உறுப்பினர்கள் பாலு, லாவண்யா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு அளித்தது. அதில், புகார்தாரர் பாரதியின் கணவர் சுவாமிநாதன் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, 9 நாட்கள் உள்நோயாளியாக இருந்து அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். இதற்காக புகார்தாரர் ரூ.3,63,308 செலவிட்டுள்ளார் என்பது வழக்கில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இழப்பீடு வழங்க உத்தரவு
ஆனால் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தினர் ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் மட்டுமே அங்கீகரித்து அத்தொகையை வழங்கியுள்ளனர். மீதி வரவேண்டிய தொகை ரூ.1,98,308-ஐ புகார்தாரர் கேட்டதில் காப்பீட்டு நிறுவனம் சரியான பதிலை அளிக்கவில்லை. தமிழ்நாடு அரசு, நிதி (சம்பளங்கள்) துறையின் 29.6.2012-ம் தேதிய அரசாணை எண் 243) மூலம் மேற்படி திட்டத்தின் கீழ் மருத்துவ செலவுகளுக்காக புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ளவர்கள் ரூ.4 லட்சம் வரை பெற தகுதி உடையவர்கள்.
இதனால் புகார்தாரரின் கணவருக்கு ஏற்பட்ட முழு மருத்துவ செலவையும் வழங்க வேண்டியது காப்பீட்டு நிறுவனத்தின் கடமையாகும். ஆனால் பகுதி தொகை வழங்காமல் காப்பீட்டு நிறுவனம் மறுத்துள்ளது சேவை குறைபாடாகும். இதனால் புகார்தாரருக்கு மருத்துவ சிகிச்சைக்காக ஏற்பட்ட செலவில் அளிக்க வேண்டிய தொகை ரூ.1,98,308 மற்றும் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரத்தை தமிழக அரசின் சார்பில் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நிர்வகிக்கும் தனியார் நிறுவனம் வழங்க வேண்டும், என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.