< Back
மாநில செய்திகள்
தூக்குப் போடுவது போல் நடித்த மெக்கானிக் கயிறு இறுகி சாவு
திருச்சி
மாநில செய்திகள்

தூக்குப் போடுவது போல் நடித்த மெக்கானிக் கயிறு இறுகி சாவு

தினத்தந்தி
|
18 Sep 2023 9:34 PM GMT

தூக்குப் போடுவது போல் நடித்த மெக்கானிக் கயிறு இறுகி உயிரிழந்தார்.

மெக்கானிக்

திருச்சி உய்யகொண்டான் திருமலை பகுதியில் வசித்து வந்தவர் ஜெயக்குமார் (வயது 28). இருசக்கர வாகன மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி நிர்மலா (26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஜெயக்குமார் மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்.

அவர், தினமும் மது குடித்துவிட்டு வந்து தனது மனைவியிடம் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அதனால் நிர்மலா தனது கணவருடன் கோபித்துக்கொண்டு அவ்வப்போது பேசாமல் இருப்பார். அவரை தன்னுடன் பேச வைக்க ஜெயக்குமார் அடிக்கடி விபரீத முடிவுகளை எடுப்பது போல் நாடகம் ஆடி, மனைவியை தனது வழிக்கு கொண்டுவருவது வழக்கம்.

மதுபோதையில் தகராறு

கடந்த 16-ந்தேதி இரவும் அவர் மது குடித்துவிட்டு வந்து நிர்மலாவிடம் தகராறு செய்துள்ளார். இதனால் தனது கணவர் மீது கோபத்தில் இருந்த நிர்மலா எதுவும் பேசாமல் தூங்க சென்றுவிட்டார். பின்னர் மறுநாள் காலை எழுந்த நிர்மலா வழக்கம் போல் வீட்டு வேலைகளை பார்த்துவிட்டு, காபி போட்டு தனது கணவருக்கு கொடுத்துள்ளார். அப்போது, கோபத்தில் அவர், தனது கணவரிடம் பேசவில்லை. காலை 9 மணி அளவில் நிர்மலா குளியல் அறைக்கு சென்றுள்ளார். அப்போது, அவரை மிரட்டுவதற்காக குழந்தைகள் ஓட்டும் சிறிய சைக்கிள் மீது ஏறிநின்று, மின்விசிறி கொக்கியில் நைலான் கயிற்றை கழுத்தில் மாட்டிக் கொண்டு தூக்குப் போடுவதுபோல் ஜெயக்குமார் நடித்துள்ளார்.

விளையாட்டு விபரீதம் ஆனது

வழக்கம் போல் மிரட்டுவதாக எண்ணிக்கொண்டு, நிர்மலா குளியல் அறைக்குள் சென்றுவிட்டார். ஆனால் விதி ஜெயக்குமாரை விடவில்லை. சைக்கிள் நகர்ந்து விட்டது. இதனால் அவருடைய கழுத்தில் கயிறு இறுகி, உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். அப்போது குளியல் அறையில் இருந்து வெளியே வந்த நிர்மலா, இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக ஜெயக்குமாரை அழைத்துச்சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்த திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் ஜெயக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நிர்மலா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தூக்குப் போடுவது போல் விளையாட்டாக நடித்த சம்பவம் விபரீதத்தில் முடிந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்