< Back
மாநில செய்திகள்
மாயனூர் கதவணை முழு கொள்ளளவை எட்டியது
கரூர்
மாநில செய்திகள்

மாயனூர் கதவணை முழு கொள்ளளவை எட்டியது

தினத்தந்தி
|
4 Sep 2023 6:21 PM GMT

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துள்ளதால் மாயனூர் கதவணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாயனூர் கதவணை

கரூர் மாவட்டம் மாயனூரில் காவிரி ஆற்றின் குறுக்கே 1.5 டி.எம்.சி. தண்ணீர் தேக்கும் வகையில் கதவணை கட்டப்பட்டு உள்ளது. இங்கு மேட்டூர் அணை, அமராவதி அணை, பவானிசாகர் அணை மற்றும் நொய்யல் ஆற்றில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, கிளை வாய்க்கால் மற்றும் காவிரி ஆற்றில் பாசனத்திற்காக திறந்து விடப்படுவது வழக்கம். இங்கு தண்ணீர் திறந்து விட்டால் கரூர், திருச்சி, தஞ்சையை சேர்ந்த விவசாயிகள் பயனடைவார்கள்.

இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து சரியாக மழை பெய்யாததால் மேட்டூர் அணையில் இருந்து குறைவான அளவே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் கிருஷ்ணராயபுரம், குளித்தலை வட்டார விவசாயிகள் சம்பா குறுவை சாகுபடி பணிகளை இன்னும் தொடங்காமலே உள்ளனர். நீர்வளத்துறை உத்தரவின்படி மாயனூர் கதவணைக்கு அவ்வபோது கிடைக்கும் தண்ணீரை சேமிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் மாயனூர் கதவணையில் குறைவான அளவே தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது.

முழு கொள்ளளவை எட்டியது

இந்நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மாயனூர் கதவணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் தற்ேபாது கடல்போல் காட்சியளிக்கிறது. கதவணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 315 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் முழுவதும் அப்படியே காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்