< Back
மாநில செய்திகள்
மாணவிக்கு மஞ்சள் கயிறு கட்டிய விவகாரம் - விசாரணையை சிறார் நீதிக் குழுமத்துக்கு மாற்றி சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
மாநில செய்திகள்

மாணவிக்கு மஞ்சள் கயிறு கட்டிய விவகாரம் - விசாரணையை சிறார் நீதிக் குழுமத்துக்கு மாற்றி சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
26 Dec 2022 6:55 PM IST

சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு சக மாணவன் மஞ்சள் கயிறு கட்டிய வழக்கின் விசாரணையை சிறார் நீதிக் குழுமத்துக்கு மாற்றி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு சக மாணவன் மஞ்சள் கயிறு கட்டி வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதையடுத்து அந்த மாணவியை மாவட்ட குழந்தைகள் நல குழுவினர் அரசு காப்பகத்தில் அடைத்தனர். அதேபோல அந்த மாணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.

அரசு காப்பகத்தில் அடைக்கப்பட்ட மாணவியை மீட்க கேட்டு மாணவியின் தந்தை கோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மாணவியும் மாணவனும் விடுதலை செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் மாணவனை கைது செய்த விவகாரம் தொடர்பாக விரிவாக விசாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.

அதன் அடிப்படையில் இந்த வழக்கு சமீபத்தில் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆனந்த வெங்கடேஷ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மாணவனின் கைதுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதேபோல போக்சோ மற்றும் சிறார் குற்றங்களை காவல்துறையினர் கையாள்வது குறித்து புதிய விதிகளை உருவாக்கவும் ஆலோசனை வழங்கினர்.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் பதிவு செய்த வழக்கின் விசாரணையை சிறார் நீதி குழுமத்திற்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் போக்சோ மற்றும் சிறார் குற்றங்களை காவல்துறையினர் கையாள்வது குறித்து அவ்வப்போது உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டி இருப்பதால் இந்த வழக்கை சிறப்பு அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்றும் அதற்கென சிறப்பு அமர்வை அமைக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தனர்.

மேலும் அந்த சிறப்பு அமர்வில் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் இடம்பெற வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்