< Back
மாநில செய்திகள்
பாடகர் மனோவின் 2 மகன்களை கைதுசெய்ய தீவிரம் காட்டும் போலீசார் - காரணம் இதுதான்...
மாநில செய்திகள்

பாடகர் மனோவின் 2 மகன்களை கைதுசெய்ய தீவிரம் காட்டும் போலீசார் - காரணம் இதுதான்...

தினத்தந்தி
|
12 Sept 2024 8:30 AM IST

செல்போன் சிக்னலை வைத்து மனோவின் மகன்களை பிடிக்க போலீசார் ஈசிஆர் விரைந்துள்ளனர்.

சென்னை,

பிரபல திரைப்பட பின்னணி பாடகரான மனோ, சென்னை வளசரவாக்கம், ஸ்ரீதேவி குப்பம் மெயின் ரோடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு சாகீர் மற்றும் ரபீக் என 2 மகன்கள் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு மனோவின் மகன்கள் இருவரும் தங்களது வீட்டின் முன்பு நண்பர்களுடன் குடிபோதையில் நின்று பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதியில் கால்பந்து பயிற்சிக்கு வந்த வாலிபர்கள் சிலர், மனோவின் வீட்டின் எதிரே உள்ள ஓட்டலில் சாப்பிட்டு விட்டு, மனோவின் வீட்டை வேடிக்கை பார்த்தபடி நடந்து சென்றதாக தெரிகிறது.

இதனை பார்த்த மனோவின் மகன்கள், எதற்காக எங்களது வீட்டை நோட்டமிட்டவாறு செல்கிறீர்கள்? என்று கேட்டு, தனது நண்பர்களுடன் சேர்ந்து ரித்தீஷ்(வயது 16) மற்றும் கிருபாகரன்(20) ஆகியோரை பிடித்து தாக்கியதாக தெரிகிறது. இதனை கண்டதும் அவர்களுடன் வந்த நண்பர்கள் தப்பி ஓடிவிட்டனர்.பின்னர் ரித்தீஷ், கிருபாகரன் இருவரையும் அவர்கள் முட்டிப்போட வைத்து சரமாரியாக தாக்கி உள்ளனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இருவரும் கொடுத்த புகாரின்பேரில் வளசரவாக்கம் போலீசார் மனோவின் மகன்களான ரபீக், சாகீர் மற்றும் அவரது நண்பர்கள் என 5 பேர் மீது ஆபாசமாக பேசுதல், தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் விக்னேஷ் (28), தர்மா (26) ஆகிய 2 பேரை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள மனோவின் 2 மகன்கள் உள்பட 3 பேரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் தலைமறைவாக உள்ள பாடகர் மனோவின் மகன்களை பிடிக்க வளசரவாக்கம் காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான 5 பேர் கொண்ட தனிப்படை ஈசிஆர் விரைந்துள்ளது. செல்போன் சிக்னலை வைத்து மனோவின் மகன்களை பிடிக்க போலீசார் ஈசிஆர் விரைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்