< Back
மாநில செய்திகள்
கள்ளக்காதலியின் கணவரை கத்தியால் குத்திய கொத்தனார் கைது
மாநில செய்திகள்

கள்ளக்காதலியின் கணவரை கத்தியால் குத்திய கொத்தனார் கைது

தினத்தந்தி
|
5 July 2024 2:59 AM IST

தக்கலை அருகே கள்ளக்காதலியின் கணவரை கத்தியால் குத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.

தக்கலை,

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள மாறாங்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 34), கொத்தனார். இவர் மெர்லின் சீத்தா (30) என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ராஜேந்திரனுடன் கொத்தனார் வேலைக்கு செல்லும் குமாரபுரத்தை சேர்ந்த ரீகன் ஜோய் (30) என்பவர் அடிக்கடி ராஜேந்திரனின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.

அப்போது மெர்லின் சீத்தாவுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதை அறிந்த ராஜேந்திரன், மனைவியை கண்டித்ததோடு ரீகன் ஜோயிடம் உள்ள நட்பையும் துண்டித்தார்.

ஆனாலும் ரீகன் ஜோயும், மெர்லின் சீத்தாவும் கள்ளத்தொடர்பை விடாமல் தொடர்ந்தனர். ஒரு கட்டத்தில் 1½ ஆண்டுக்கு முன்பு கணவரை விட்டு பிரிந்த மெர்லின் சீத்தா, கள்ளக்காதலனுடன் சென்று குடும்பம் நடத்தினார். இதனால் ராஜேந்திரன் தனிமையில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 5-ந் தேதி இரவு 7 மணிக்கு ராஜேந்திரன் மணக்காவிளைக்கு சென்று கொண்டிருந்தார். அங்கு மணலிக்கரை சந்தையில் வைத்து தனது காதல் மனைவி மெர்லின் சீத்தா, ரீகன் ஜோயுடன் நிற்பதை பார்த்து ஆத்திரமடைந்தார். உடனே ராஜேந்திரன், மெர்லின் சீத்தாவுடன் சென்று இப்படி ஏமாற்றி விட்டாயே என கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இவன் உயிரோடு இருந்தால் நம்மை வாழ விடமாட்டான் என மெர்லின் சீத்தா கூற, அருகில் நின்ற ரீகன் ஜோய் திடீரென கையில் வைத்திருந்த கத்தியால் ராஜேந்திரனின் வயிற்றில் குத்தினார். இதில் அவர் குடல் சரிந்து கீழே விழுந்தார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் ரீகன் ஜோயும், மெர்லின் சீத்தாவும் அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர் படுகாயமடைந்த ராஜேந்திரனை பொதுமக்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் ரீகன் ஜோய், மெர்லின் சீத்தா ஆகிய 2 பேர் மீது கொலை முயற்சி உள்பட 3 பிரிவுகளில் கொற்றிக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே ராஜேந்திரன் தன்னை தாக்கியதாக கூறி தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மெர்லின் சீத்தாவை 2 நாட்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர். ஆனால் கள்ளக்காதலன் ரீகன் ஜோய் தலைமறைவானார். அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

நேற்று முன்தினம் கேரளாவிற்கு தப்பிச் செல்வதற்காக குழித்துறை ரெயில் நிலையத்தில் நின்ற ரீகன் ஜோயை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை பத்மநாபபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்