< Back
மாநில செய்திகள்
நாகர்கோவில்: பேச மறுத்த கள்ளக்காதலி - ஓட ஓட விரட்டி கத்தியால் குத்திய கொத்தனார்
மாநில செய்திகள்

நாகர்கோவில்: பேச மறுத்த கள்ளக்காதலி - ஓட ஓட விரட்டி கத்தியால் குத்திய கொத்தனார்

தினத்தந்தி
|
15 May 2024 11:53 AM IST

நாகர்கோவிலில் கள்ளக்காதலியை ஓட ஓட விரட்டி கத்தியால் குத்திய கொத்தனார் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் மறவன்குடியிருப்பு அருகே உள்ள கலைநகரை சேர்ந்தவர் சிவரஞ்சனி (வயது 24). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

சிவரஞ்சனி கலைநகர் பகுதியில் குழந்தைகளுடன் தனியாக வசித்து வரும் நிலையில் பட்டகசாலியன்விளையில் கொசுவலை விற்பனை செய்யும் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் நேற்று வழக்கம்போல் கடைக்கு வேலைக்கு சென்றார். அங்கு பிற்பகலில் வேலை செய்து கொண்டிருந்த போது கடைக்கு ஒரு வாலிபர் வந்தார். அந்த வாலிபர் சிவரஞ்சனியிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் திடீரென ஆத்திரமடைந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிவரஞ்சனியை குத்த முயன்றார்.

சுதாரித்துக் கொண்ட சிவரஞ்சனி தனது உயிரை காப்பாற்ற அந்த வாலிபரை தள்ளிவிட்டு "காப்பாற்றுங்கள்...காப்பாற்றுங்கள்..." என சத்தமிட்டப்படி சாலையில் ஓடினார். ஆனாலும் ஆத்திரம் தீராத அந்த வாலிபர் துரத்தி சென்றார். இறுதியில் கலைநகர் பிள்ளையார் கோவில் அருகே வைத்து சிவரஞ்சனியை மடக்கி பிடித்து கழுத்தின் அருகே கத்தியால் குத்தினார். இதில் காயமடைந்த சிவரஞ்சனி அலறினார். இதை பார்த்த பொதுமக்கள் சிலர் அவரை காப்பாற்ற ஓடி வந்தனர். உடனே அந்த வாலிபர் அங்கிருந்து இருளப்பபுரம் நோக்கி தப்பி ஓடினார்.

கத்திக்குத்தில் காயமடைந்த சிவரஞ்சனியை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தப்பி ஓடிய வாலிபர் இருளப்பபுரம் பகுதியில் வைத்து தனது கழுத்தை கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயன்றார். கழுத்தில் இருந்து ரத்தம் வடிந்த நிலையில் அவர், இளம்பெண் தன்னை ஏமாற்றியதாக கூறி கதறி அழுதார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த கோட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் இளம்பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபர் மருங்கூர் அருகே உள்ள அமராவதிவிளையை சேர்ந்த கொத்தனார் ஆண்டனி வினோ (33) என்பது தெரிய வந்தது. இவருக்கும் சிவரஞ்சனிக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் செல்போன் மூலம் அடிக்கடி பேசி பழகி வந்தனர்.

இந்தநிலையில் தற்போது ஆண்டனி வினோவுடன் பேசுவதை திடீரென சிவரஞ்சனி தவிர்த்து வந்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடந்த போதுதான் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த ஆண்டனி வினோ கத்தியால் இளம்பெண்ணை குத்தியதுடன், தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.

பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கத்திக்குத்து நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்