திருவள்ளூர்
கட்டிட வேலை செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி கொத்தனார் படுகாயம்
|கடம்பத்தூர் அருகே கட்டிட வேலை செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி கொத்தனார் படுகாயம் அடைந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகே உள்ள செஞ்சி கிராமம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரகுபதி (வயது 35). கொத்தனாரான இவர் கடந்த மாதம் 29-ந் தேதியன்று அதே பகுதியில் உள்ள தாவீத் என்பவரின் வீட்டிற்கு கட்டிட வேலைக்காக சென்றார். அப்போது அவர் வேலை செய்து கொண்டிருந்த இடத்திற்கு அருகில் மின்சார வயர் செல்வதை வீட்டார் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. மின்சார வயர் செல்வதை கவனிக்காத ரகுபதி அதன் மீது மிதித்ததால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து ரகுபதி கடம்பத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் இது சம்பந்தமாக தாவீத் அவரது மகன்கள் அருண், அஜித் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.