திருச்சி
நகைக்கடையில் பொதுமக்கள் இழந்த பணத்தை மீட்டு தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
|நகைக்கடையில் பொதுமக்கள் இழந்த பணத்தை மீட்டு தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சி-கரூர் பைபாஸ்ரோட்டில் கே.டி.ஜங்ஷன் அருகே செயல்பட்டு வந்த பிரணவ் ஜூவல்லர்ஸ் நகைக்கடையில் பொதுமக்கள் ரூ.100 கோடிக்கு முதலீடு செய்தனர். ஆனால் அவர்களுக்கு பணத்தை கொடுக்காமல் உரிமையாளர்கள் தலைமறைவாகி விட்டதால் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் பொதுமக்கள் புகார் அளித்து வருகிறார்கள். இந்தநிலையில் நகைக்கடையில் பொதுமக்கள் இழந்த பணத்தை மீட்டு தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரேணுகா தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினார்கள். கவர்ச்சிகரமான விளம்பரம் தரும் சீட்டு, நகைச்சீட்டு, நிதி நிறுவனங்களை காவல்துறை மூலம் கண்காணிக்க வேண்டும். பொதுமக்கள் முதலீட்டை பாதுகாக்க சட்டமியற்ற வேண்டும். பொதுமக்கள் இழந்த பணத்தை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மோசடிக்கு உடந்தையாக செயல்படுவோரை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.