கடலூரில் என்.எல்.சி.யை கண்டித்து வரும் 8ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போராட்டம்
|கடலூரில் என்.எல்.சி.யை கண்டித்து வரும் 8ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் நடைபெறும் என எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்துள்ளனர்.
கடலூர்,
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் 2-வது சுரங்க விரிவாக்க பணிக்காக சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வளையமாதேவி, கத்தாழை, கரிவெட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தி வாய்க்கால் மற்றும் சாலை அமைக்கும் பணியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் போலீஸ் பாதுகாப்புடன் வாய்க்கால் மற்றும் சாலை அமைக்கும் பணிகளை என்.எல்.சி. நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.க்கள் நாகை மாலி, சின்னத்துரை உள்ளிட்டோர் சந்திக்க சென்றனர். அவர்களை சந்தித்துவிட்டு எம்.எல்.ஏ.க்கள் நாகைமாலி மற்றும் சின்னத்துரை செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கடலூர் மாவட்டம் முழுவதும் என்.எல்.சி.யை கண்டித்து வரும் 8ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.