இளம்பெண்களை குத்த முயன்ற நபர்... சினிமாவில் வருவது போல குறுக்கே பாய்ந்து உயிரை விட்ட இளைஞர்
|மதுபோதையில் இளம்பெண்களை கத்தியால் குத்த வந்தவரை தடுக்க சென்ற இளைஞர் பரிதாபமாக கத்தியால் குத்துப்பட்டு உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அடுத்த அதியூர் பகுதியை சேர்ந்த சகோதரிகளான இரு இளம்பெண்கள், தங்களின் பெரியம்மா வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில், இருவரிடமும் அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் அடிக்கடி மதுபோதையில் தகராறு செய்து வந்துள்ளார்.
தொடர்ந்து சகோதரிகளின் வீட்டிற்கு முன்பு அமர்ந்து சண்முகம் மது அருந்தி வந்த நிலையில், இது குறித்து அவர்களின் பெரியம்மா தட்டிக்கேட்டுள்ளார். இதனால், ஏற்பட்ட தகராறு ஒரு கட்டத்தில் முற்றிய நிலையில், இரு பெண்களையும் சண்முகம் கத்தியால் குத்த முற்பட்டுள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த, இலக்கிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த வல்லரசு என்ற இளைஞர் சண்டையை விலக்கி விட குறுக்கே பாய்ந்த நிலையில், பரிதாபமாக கத்தியால் குத்துப்பட்டு உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இளைஞரின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், தலைமறைவான சண்முகத்தை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.