தஞ்சாவூர்
பெட்ரோல் குண்டு தயாரித்தவர் கைது
|பெட்ரோல் குண்டு தயாரித்தவர் கைது
நாச்சியார்கோவில் அருகே புகார்கொடுத்துவிட்டு பெட்ரோல் குண்டு தயாரித்து நாடகமாடியவரை போலீசார் கைது செய்தனர்.
குப்பை எரிந்தது
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலை அடுத்த துக்காட்சி சன்னதி தெருவில் வசித்து வருபவர் அலாவுதீன் சுல்தான். இவரது மகன் சுல்தான் (வயது27). இவர் துக்காட்சி கடை தெருவில் காலணி கடை வைத்துள்ளார். நேற்றுமுன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு சுல்தான் கழிவறை செல்ல எழுந்தபோது, வீட்டுக்கு முன் பக்கத்தில் உள்ள தென்னை மரம் அருகில் குப்பை எரிந்து கொண்டிருந்ததை பார்த்தார். இதுகுறித்து சுல்தான் நாச்சியார்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
போலீசில் புகார்
இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீசில் சுல்தான் புகார் கொடுத்தார். அதில், குப்பையில் எரிந்த தீயை நானும், எனது தந்தையும் சேர்ந்து தண்ணீர் ஊற்றி அணைத்தோம். தனது வீட்டு வாசலில் 2 திரி எரிந்த நிலையில் மண்ணெண்ணெய் பெட்ரோல் வாசனையுடன் குவாட்டர் பாட்டில் கிடந்தது. யாரோ தங்களை அச்சுறுத்தும் நோக்கத்தில் மதுபாட்டில்கல் உள்ளே பெட்ரோலை ஊற்றி தூக்கி எரிந்துள்ளனர். எனவே இதில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
நாடகமாடியது அம்பலம்
இதுகுறித்து நாச்சியார் ேகாவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சோதனை மேற்கொண்டதில், 2 குவாட்டர் பாட்டிலில் மண்எண்ணெய் பெட்ரோல் கலந்து பேப்பரில் திரி செய்தது போக மீதமுள்ள மண்எண்ணெய், திரிக்கு பயன்படுத்திய பேப்பர், திரி பாதி எரிந்த நிலையில் மீதமுள்ள பேப்பர், சுல்தான் வீட்டின் பின்பக்கத்தில் இருந்த பேப்பர் கட்டிங் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து நாச்சியார்கோவில் போலீசார் சுல்தானை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், சுல்தானே புகார் கொடுத்துவிட்டு தானே பெட்ரோல்குண்டு தயாரித்து நாடகமாடியது தெரியவந்தது. பின்னர் சுல்தானை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.