மயிலாடுதுறை
மூதாட்டியை தாக்கி நகை பறித்தவர் கைது
|கொள்ளிடம் அருகே மூதாட்டியை தாக்கி நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
கொள்ளிடம் அருகே மூதாட்டியை தாக்கி நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
நகை பறிப்பு
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு அண்ணா சாலை மெயின் ரோடு பகுதியை சேர்ந்த நாராயணசாமி மனைவி இருசாயி (வயது70). இவர் கடந்த 13-ந் தேதி இரவு வீட்டின் கதவை உள்பக்கம் பூட்டாமல் தனியாக படுத்திருந்தார்.
நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர், அவருடைய முகத்தில் துணியை போட்டு மூடி, கழுத்தை நெரித்து தாக்கி கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலி, காதுகளில் அணிந்திருந்த 1 பவுன் தோடு, கையில் போட்டிருந்த ½ பவுன் மோதிரம் உள்ளிட்ட 6½ பவுன் நகைகளை பறித்து சென்றார். இதில் கழுத்தில் காயம் அடைந்த இருசாயி சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
வாலிபர் கைது
இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்ட கணேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பாலக்குடி புதுத்தெருவை சேர்ந்த அழகர்சாமி மகன் அஜித் என்கிற அஜித்குமார் (28) என்பவர் இருசாயியை தாக்கி நகைகளை பறித்து சென்றதும், குடவாசல் பகுதியில் உள்ள 3 அடகு கடைகளில் நகையை அடமானம் வைத்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கடைகளில் இருந்து 6½ பவுன் நகைகளை பறிமுதல் செய்து, அஜித்குமாரை கைது செய்தனர். பின்னர் சீர்காழி கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று நாகை சிறையில் அடைத்தனர்.