செங்கல்பட்டு
அகழியில் தேங்கிய மழைநீரில் ரம்மியமாக காட்சி அளித்த மாமல்லபுரம் கடற்கரை கோவில்
|அகழியில் தேங்கிய மழை நீரில் மாமல்லபுரம் கடற்கரை கோவில் ரம்மியமாக காட்சி அளித்தது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களால் வடிவமைக்கப்பட்ட கடற்கரை கோவில் உலக பாரம்பரிய நினைவு சின்னமாக திகழ்கிறது. 7-ம் நூற்றாண்டில் துறைமுக பட்டினமாக விளங்கிய மாமல்லபுரத்தில் படகு மூலமாக வரும் சீன நாட்டினர் கடற்கரை கோவில் படகு துறை அகழியில் இறங்கி பல்லவர்களின் தலைநகரமாக விளங்கிய காஞ்சீபுரம் சென்று பண்டமாற்று முறை வணிகம் செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அப்படி வரலாற்று சிறப்பு மிக்க இந்த கடற்கரை கோவில் வளாகத்தில் மழைக்காலங்களில் இந்த படகு துறையில் மழை நீர் தேங்கி கோவிலின் பின்முகப்புடன் இந்த பகுதி ரம்மியமாக காட்சி அளிப்பது வழக்கம். தற்போது பெய்த மழையின் காரணமாக இந்த படகு துறை அகழி மற்றும் முன்புற பகுதியில் உள்ள அகழி போன்றவற்றில் மழை நீர் தேங்கி அழகுற காட்சி அளிக்கிறது. சுற்றுலா பயணிகள் மழைக்காலங்களில் இங்கு வரும் போது இந்த காட்சியை ரசித்து படம் பிடிப்பது வழக்கம். குறிப்பாக நேற்று சுற்றுலா வந்த வட மாநில பயணிகள், கல்லூரி, பள்ளி மாணவர்கள் பலர் இந்த படகு துறையின் படிகட்டுகளில் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்ததை காண முடிந்தது.
நேற்று மாமல்லபுரத்தில் மழை பெய்யாத நிலையில் கடல் பலத்த சீற்றத்துடன் காணப்பட்டது. அலைகள் வழக்கத்துக்கு மாறாக அதிக இரைச்சலுடன் ஆர்ப்பரித்தன. ராட்சத அலைகள் 5 மீட்டர் தூரத்திற்கு கரை பகுதியை நோக்கி சீறி எழும்பி வந்தன. இருப்பினும் சுற்றுலா பயணிகள் பலர் கடலில் குளித்து மகிழ்ந்ததை காண முடிந்தது. மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் மேற்பார்வையில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையில், மாமல்லபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உள்ளிட்ட ஏராளமான போலீசார் கடலோர பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வந்தபோது கடலுக்கு வந்த சுற்றுலா வந்த பயணிகள் பலரிடம் கடல் பலத்த சீற்றத்துடன் ஆர்ப்பரிக்கும் இந்த நேரத்தில் இங்கு யாரும் குளிக்க வேண்டாம் என்று அறிவுரை கூறி அனுப்பியதை காண முடிந்தது.