< Back
மாநில செய்திகள்
சிவில் சர்வீசஸ் பதவிக்கான முதன்மை தேர்வு தொடங்கியது - 25-ந்தேதி வரை நடக்கிறது
மாநில செய்திகள்

சிவில் சர்வீசஸ் பதவிக்கான முதன்மை தேர்வு தொடங்கியது - 25-ந்தேதி வரை நடக்கிறது

தினத்தந்தி
|
17 Sept 2022 7:50 AM IST

1,011 காலி பணியிடங்களுக்கான சிவில் சர்வீசஸ் பதவிக்கு முதன்மை தேர்வு நேற்று தொடங்கியது. வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை தேர்வு நடக்கிறது.

சென்னை:

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்பட 24 வகையான சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான காலி இடங்கள் குறித்த அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி வெளியிட்டது.

மொத்தம் 1,011 காலி பணியிடங்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து சுமார் 5 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த பதவிகளுக்கு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

அதன்படி, முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூன் மாதம் 5-ந்தேதி நடந்தது. இதற்கான தேர்வு முடிவு அதே மாதம் 22-ந்தேதி வெளியானது. சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதிய இந்த தேர்வில் 13 ஆயிரத்து 90 பேர் தேர்ச்சி பெற்றதாகவும், தமிழகத்தில் மட்டும் 610 பேர் வெற்றி பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின.

முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். அந்த வகையில் முதன்மைத் தேர்வு 16 (நேற்று), 17 (இன்று), 18 (நாளை) மற்றும் 24 (சனிக்கிழமை), 25 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, முதன்மைத் தேர்வு நேற்று தொடங்கி இருக்கிறது. காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு மதியம் 12 மணிக்கு நிறைவு பெற்றது. தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் இதற்காக 2 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

முதல் நாளான நேற்று கட்டுரை வடிவிலான தேர்வு நடந்தது. ஏ, பி பிரிவுகளில் இருந்து தலா 4 வினாக்கள் கேட்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் ஒரு வினாவுக்கு பதில் அளிக்க வேண்டும். அவ்வாறு கேட்கப்பட்ட 8 வினாக்களும் புரிந்து பதில் அளிக்கக் கூடிய வகையில் நேரடி வினாக்களாகவே இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இந்த கட்டுரை வடிவிலான தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் அனைத்தும் புரியாமல் இருந்ததாக அப்போது தேர்வர்கள் புலம்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று (சனிக்கிழமை) காலை பொதுப்பாடம்-1-க்கான தேர்வும், பிற்பகலில் பொதுப்பாடம் 2-க்கான தேர்வும் நடக்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை பொதுப்பாடம்-3-க்கான தேர்வும், மதியம் பொதுப்பாடம் 4-க்கான தேர்வும் நடைபெற உள்ளது.

அதனைத்தொடர்ந்து 5 நாட்கள் இடைவெளிவிட்டு, 24-ந்தேதி காலை இந்திய மொழிகளுக்கான தேர்வும், பிற்பகலில் ஆங்கிலத் தேர்வும் நடத்தப்பட இருக்கிறது. 25-ந்தேதி காலை விருப்பப்பாடம் தாள்-1 தேர்வும், மதியம் விருப்பப்பாடம் தாள்-2 தேர்வும் நடக்கிறது.

மேலும் செய்திகள்