கோயம்புத்தூர்
விநாயகர் சிலை முன்பு உறுதிமொழி எடுத்த மதுபிரியர்கள்
|காரமடையில் இனிமேல் குடிக்க மாட்டோம் என்று விநாயகர் சிலை முன்பு மதுப்பிரியர்கள் உறுதிமொழி எடுத்தனர்.
காரமடை
கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. இதன்படி காரமடை அருகே கண்ணார்பாளையம் மூதேவர் முக்கு பகுதியில் மதுபிரியர்கள் சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அங்கு மதுபிரியர்கள் விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று சிலையை கரைப்பையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதில் மதுப்பிரியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். அப்போது மதுப்பிரியர்கள் திடீரென தங்களது குடும்பத்தினர் முன்னிலையில், விநாயகர் சிலை முன்பு வைத்து இனிமேல் மதுகுடிக்க மாட்டோம்... என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் மதுகுடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, பூஜைக்கு வந்திருந்தவர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் காரமடை இந்து முன்னணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.