திருவள்ளூர்
சாலையில் சென்றபோது டயர் வெடித்த விபத்தில் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
|ஆர்.கே.பேட்டையில் சாலையில் சென்றபோது டயர் வெடித்த விபத்தில் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 30 டன் ரேஷன் அரிசி எரிந்து நாசமானது.
லாரி தீப்பிடித்தது
திருவள்ளுவர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் சின்ன நாகபூண்டி கிராமம் அருகே அரிசி மூட்டைகளுடன் லாரி ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டயர் வெடித்ததில் லாரி தீப்பிடித்துக் கொண்டது. இதனால் லாரியை ஓட்டிச் சென்ற டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு ஓடிவிட்டார். தகவல் கிடைத்து சோளிங்கரிலிருந்து தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்க போராடினார்கள். ஆனால் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் தீயை அணைக்க முடியவில்லை.
ரேஷன் அரிசி மூட்டைகள்
இறுதியில் லாரி முழுதும் எரிந்து தீக்கிரையானது. லாரியிலிருந்த 30 ஆயிரம் கிலோ எடை கொண்ட அரிசி மூட்டைகளும் தீயில் கருகி நாசமானது. விசாரணையில், இந்த அரிசி மூட்டைகள் பொன்னேரி அருகே உள்ள பஞ்செட்டி அரசு அரிசி கிடங்கில் இருந்து வேலூர் மாவட்டம் திருவலம் அரசு குடோனுக்கு 30 டன் எடை கொண்ட ரேஷன் அரிசி மூட்டைகளை கொண்டு சென்ற போது விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர் இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.