அரியலூர்
கிளிஞ்சல் ஏற்றிச்சென்ற லாரி தீப்பற்றி எரிந்தது
|கிளிஞ்சல் ஏற்றிச்சென்ற லாரி தீப்பற்றி எரிந்தது.
கீழப்பழுவூர்:
அரியலூர் அருகே உள்ள ஒரு சிமெண்டு ஆலையில் இருந்து கிளிஞ்சல்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சாத்தூர் நோக்கி சென்றது. அந்த லாரியை டிரைவர் துரைசிங்கம் ஓட்டினார். கீழப்பழுவூர் அருகே கீழையூர் பகுதியில் உள்ள திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலத்தில் லாரி சென்றபோது வெப்பத்தின் காரணமாக லாரி திடீரென தீப்பற்றி எரிந்தது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக அரியலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். இதில் லாரியில் இருந்த கிளிஞ்சல்களின் ஒரு பகுதி எரிந்து சாம்பலானது. லாரி முழுமையாக தீப்பற்றி எரிந்து இருந்தால் டீசல் டேங்க் வெடித்து பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கும். ஆனால் தீயணைப்புத் துறையினரின் துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.