< Back
மாநில செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் நகைகள் திருட்டு
திருச்சி
மாநில செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் நகைகள் திருட்டு

தினத்தந்தி
|
21 July 2023 1:41 AM IST

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் நகைகள் திருட்டுபோனது.

துறையூர்:

நகைகள் திருட்டு

துறையூர் அடுத்த சித்திரப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் சரவணன்(வயது 60), தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் வீட்டை பூட்டி விட்டு நேற்று முன்தினம் வெளியூர் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து மர்ம நபர்கள் மாடியில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு, கீழே உள்ள வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் ரூ.7 ஆயிரத்தை திருடி சென்றனர். மாடியில் குடியிருப்பவர் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து வெளியே வந்தார். இந்த சம்பவம் குறித்து துறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

*துவரங்குறிச்சி காட்டுமாரியம்மன் கோவில் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில் விழுந்த பசுமாட்டை துவரங்குறிச்சி தீயணைப்பு துறை வீரர்கள் மீட்டனர்.

*திருச்சியை சேர்ந்த பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட திருவானைக்காவல் நடுகொண்டயம்பேட்டையை சேர்ந்த தனபிரியன் என்ற பாலுவை(38) குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா உத்தரவிட்டார்.

பள்ளத்தில் கவிழ்ந்த கார்

*சிவகங்கையில் இருந்து முசிறிக்கு சென்ற கார், துவரங்குறிச்சி அடுத்த யாகபுரம் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மைய தடுப்புச் சுவரை தாண்டி எதிர்புறம் உள்ள சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

*திருச்சி தில்லைநகர் அருள்நகரை சேர்ந்த முத்துக்குமார்(வயது 33) தென்னூர் பஸ்நிறுத்தம் அருகில் உள்ள டாஸ்மாக் கடை முன் ரூ.32 ஆயிரத்துடன் கிடந்த பையை எடுத்து தில்லைநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

* பொன்மலை ரெயில்வே பணிமனையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் சுமைப்பணி தொழிலாளர்களின் வேலையை பறிக்கக்கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பா.ஜ.க. நிர்வாகி மீது வழக்கு

*பா.ஜ.க. முன்னாள் இளைஞர் அணி மாவட்ட செயலாளரான திருச்சி மேல சிந்தாமணியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்பவர் கோ பேக் ஸ்டாலின் என்ற வாசகத்தை பலூனில் எழுதி, ஒரு கட்டிடத்தின் மாடியில் பறக்கவிட்டது தொடர்பான புகாரின்பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

*திருச்சி மத்திய பஸ் நிலையம் மற்றும் காந்திமார்க்கெட் பகுதிகளில் பொது சுகாதார வளாகம் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து 6 இடங்களில் உள்ள சுகாதார வளாகங்களை சீரமைக்க மாநகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.23½ லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

*திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம், கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட எழில்நகர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பெண்கள் நேற்று கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து வீடுவீடாக பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்செல்வியிடம் கேட்டபோது, பொதுமக்கள் எதிர்ப்பை தொடர்ந்து பணிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்திய பின் முடிவு தெரியவரும் என்றார்.

மேலும் செய்திகள்