< Back
மாநில செய்திகள்
பாம்பன் பாலத்தில் மீண்டும் மின்விளக்குகள் ஒளிர்ந்தன
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

பாம்பன் பாலத்தில் மீண்டும் மின்விளக்குகள் ஒளிர்ந்தன

தினத்தந்தி
|
10 July 2023 12:15 AM IST

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக பாம்பன் ரோடு பாலத்தில் வேகத்தடை உள்ள இடங்களில் இரவில் மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்ந்தன.. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ராமேசுவரம்,

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக பாம்பன் ரோடு பாலத்தில் வேகத்தடை உள்ள இடங்களில் இரவில் மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்ந்தன.. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பாம்பன் ரோடு பாலம்

மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரோடு பாலம் மிக முக்கிய பங்கு வகித்து வருகின்றது. அது போல் கடலுக்குள் 79 தூண்களை கொண்டு கட்டப்பட்டுள்ள இந்த பாம்பன் பாலத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக சாலை போக்குவரத்து சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

இதற்கிடையே பாம்பன் ரோடு பாலத்தின் இருபுறமும் உள்ள பல மின்கம்பங்களில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் எரியாதது குறித்தும், குறிப்பாக ரோடு பாலத்தின் நுழைவுப் பகுதிகளில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ள இடங்களில் மின்விளக்குகள் எரியாததால் பாலம் இருள் சூழ்ந்து காணப்படுவதாகவும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு 'தினத்தந்தி' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

மின்விளக்குகள் ஒளிர தொடங்கின

இந்த நிலையில் 'தினத்தந்தி'யில் வெளிவந்த செய்தி படத்தின் எதிரொலியாக பாம்பன் ரோடு பாலத்தின் நுழைவு பகுதியில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ள இடங்களில் தற்போது மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன.. இதனால் இரவு நேரங்களில் பாம்பன் ரோடு பாலத்தில் வரக்கூடிய வாகனங்கள் மின்விளக்கு வெளிச்சத்தில் வேகத்தடை இருப்பதை பார்த்து மெதுவாக செல்கின்றன.

நுழைவுப்பகுதியில் வேகத்தடை உள்ள இடங்களில் மின் விளக்குகள் எரிய விடப்பட்டுள்ள நிலையிலும் ரோடு பாலத்தில் இன்னும் சில இடங்களில் பல மின்விளக்குகள் எரிய விடப்படாத நிலையே இருந்து வருகின்றது. எனவே ரோடு பாலத்தின் இருபுறமும் உள்ள அனைத்து மின்கம்பங்களிலும் மின்விளக்குகளையும் ஒளிர விடுவதற்கும் சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. தற்போது பாம்பன் ரோடு பாலத்தின் நுைழவு பகுதியில் மின்விளக்கு ஒளிர்வதால் ராமேசுவரம் வரும் வாகன ஓட்டிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி' நாளிதழுக்கும் நன்றி தெரிவித்து உள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்