விருதுநகர்
எலுமிச்சை விளைச்சல் அமோகம்
|வத்திராயிருப்பு பகுதியில் எலுமிச்சை பழம் விளைச்சல் அமோகமாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு பகுதியில் எலுமிச்சை பழம் விளைச்சல் அமோகமாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
எலுமிச்சை சாகுபடி
வத்திராயிருப்பு, அர்ச்சுனாபுரம், கான்சாபுரம், அத்தி கோவில், வ.மீனாட்சிபுரம், தாணிப்பாறை, சுந்தரபாண்டியம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் எலுமிச்சை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இப்பகுதியில் எலுமிச்சை பழம் விளைச்சல் நன்றாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். எலுமிச்சை காய் கிலோ ரூ.100-க்கும், எலுமிச்சைபழம் கிலோ ரூ.160-க்கும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
தொடர்மழை
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் எலுமிச்சை சாகுபடி செய்துள்ளோம். தொடர்ந்து 2 ஆண்டுகளாக பெய்த தொடர் மழையால் இப்பகுதியில் உள்ள கண்மாய்களிலும், கிணறுகளிலும் பாசனத்திற்கு தேவையான தண்ணீர் உள்ளது.
தண்ணீர் நன்றாக இருப்பதால் எதிர்பார்த்த விளைச்சல் கிடைத்துள்ளது. தற்போது எலுமிச்சை பழ மொத்த வியாபாரிகளுக்கு எலுமிச்சை காய் ரூ.100-க்கும், பழம் கிலோ ரூ.160-க்கும் விற்பனை செய்கிறோம். கடந்த ஆண்டு விளைச்சல் இருந்தும் எலுமிச்சை பழம் கிலோ ரூ.60 முதல் ரூ. 80 வரைக்கும் மட்டுமே வியாபாரிகள் வாங்கி சென்றனர். ஆகையால் சென்ற வருடம் பெரும் பாதிப்பு அடைந்தோம்.
விளைச்சல் அமோகம்
ஆனால் இந்த ஆண்டு எலுமிச்சை பழம் விளைச்சல் அமோகமாக உள்ளது. கோவில் திருவிழாக்கள் நடை பெறுவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால் எலுமிச்சை பழத்தின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் எலுமிச்சை பழத்தை நல்ல விலைக்கு வியாபாரிகள் தங்களிடம் கொள்முதல் செய்து செல்கின்றனர். கடைகளில் ஒரு கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனை செய்கின்றனர். ஒரு எலுமிச்சை பழம் ரூ.15 வரை சில்லரைக்கு வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர்.
விளைச்சல் அமோகமாக இருப்பதாலும், விலையும் உயர்ந்து இருப்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.