சேலம்
ஏரிகள் நிரம்பி கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது
|சேலம் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக தொடர்ந்து பெய்த மழையால் ஏரிகள் நிரம்பி கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் மின் கம்பங்கள், வாழைகள் சாய்ந்தன.
சேலம் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக தொடர்ந்து பெய்த மழையால் ஏரிகள் நிரம்பி கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் மின் கம்பங்கள், வாழைகள் சாய்ந்தன.
2-வது நாளாக மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழையானது இரவு வரையிலும் நீடித்தது. சில இடங்களில் மட்டும் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்தநிலையில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று 2-வது நாளாக சாரல் மழை பெய்தது. சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அழகாபுரம், சூரமங்கலம், புதிய மற்றும் பழைய பஸ் நிலையம், குகை, அன்னதானப்பட்டி, அம்மாபேட்டை உள்பட பல்வேறு இடங்களில் தொடர் சாரல் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். குறிப்பாக பள்ளப்பட்டி, களரம்பட்டி, பச்சப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.
சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் மழையால் கன்னங்குறிச்சி புதுஏரி நிரம்பி அதன் உபரிநீர் வெளியேறி வருகிறது. ஆனால் ஆபத்தை உணராமல் அங்குள்ள சிறுவர்கள் ஏரியில் குளிப்பதை காணமுடிகிறது. மழையால் மாவட்டம் முழுவதும் உள்ள ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மின் கம்பங்கள், வாழைகள் சாய்ந்தன
தலைவாசல் அருகே வீரகனூர் ஏரி தொடர் மழைக்கு நிரம்பியது. இதேபோல் வி.ராமநாதபுரம் ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறியது. இந்த தண்ணீர் வி.ராமநாதபுரம் கிராமத்துக்குள் புகுந்தது. மேலும் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் சென்றது. விவசாய நிலங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றது. இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் ஏரியின் உபரிநீர் கிராமத்துக்குள் செல்லாமல் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து சரி செய்தனர். மேலும் ஏரி கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைத்தனர். ஊனத்தூர் கிராமத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் மின்கம்பங்கள் சாய்ந்தன. மின்சார கம்பிகள், வயர்கள் அறுந்து விழுந்தன. மேலும் சூறாவளி காற்றுக்கு நூற்றுக்கணக்கான வாழைகள் சாய்ந்தன.
100 ஏக்கர் மக்காச்சோளம் சேதம்
100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம் சரிந்து சேதமானது. மேலும் தென்னை மரங்கள் முறிந்து விழுந்தன. கம்ப பெருமாள் கோவில் அருகில் இருந்த அரச மரக்கிளைகள் முறிந்து கோவில் மீது விழுந்தன. இதனால் கோவிலில் இருந்த சிலைகள் சேதம் அடைந்தன. சேதம் அடைந்த பயிர்களை வேளாண் துறை உதவி இயக்குனர் நவநீத கிருஷ்ணன் தலைமையிலான அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு சேத மதிப்பு குறித்து கணக்கிட்டனர். மழையால் வெள்ளையூரில் விவசாயி ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. மேலும் ஆத்தூர், தலைவாசல் பகுதியில் செல்லும் வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுவேத நதியிலும் மழை நீர் கரைபுரண்டு ஓடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தலைவாசல் அருகே சுவேத நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை நிரம்பியது. இதனால் இளைஞர்கள் தடுப்பணையில் உற்சாகமாக குளித்தனர்.
இருளில் மூழ்கிய ஏற்காடு
ஏற்காட்டில் நேற்று காலை முதல் சாரல் மழை பெய்தது. மேலும் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படி பயணம் செய்தனர். மலை சாலையில் கடும் பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். மழையால் சுற்றுலா சென்ற பொதுமக்கள் தாங்கள் தங்கி இருந்த பகுதிகளிலேயே முடங்கினர். இதனால் சாலையோர கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
மழை மற்றும் வியாபாரமின்மையால் ஏற்காடு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் காற்றுடன் கூடிய மழையால் ஏற்காட்டில் ஆங்காங்கே மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. அதனை ஏற்காடு மற்றும் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின.
ஏரி நிரம்பி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி ஏரி தொடர் மழையால் நிரம்பியது. அந்த ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறி அங்கு அண்ணா நகரில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர். அவர்கள் வீடுகளில் உள்ள பொருட்களை கொண்டு தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் ரேஷன் கடையை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் பொருட்கள் வாங்க முடியாமல் அவதியடைந்தனர். இதனிடையே அண்ணாநகரில் உள்ள ஒரு வீட்டுக்குள் பாம்பு நுழைய முயன்றது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் அந்த பாம்பை விரட்டினர். மேலும் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் வீடுகளுக்கு படையெடுத்துள்ளதால் அவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட ஆலச்சம்பாளையம் சங்கரன் காட்டுவளவு பகுதியை சேர்ந்த கமலா என்பவருக்கு சொந்தமான குடிசையின் சுவர் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
மழை அளவு
சேலம் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
தம்மம்பட்டி-86.4, வீரகனூர்-67, கெங்கவல்லி-56.2, ஆத்தூர்-52, பெத்தநாயக்கன்பாளையம்-50.9, சங்ககிரி-47, எடப்பாடி-42.6, தலைவாசல்-49, கரியகோவில்-48, ஏற்காடு-42, ஓமலூர்-40, ஆனைமடுவு-37, சேலம்-32, காடையாம்பட்டி-28, மேட்டூர்-23.8.