சேலம்
40 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி வழியும் ஏரி
|எடப்பாடி அருகே 40 ஆண்டுகளுக்கு ஏரி நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எடப்பாடி:-
எடப்பாடி அருகே 40 ஆண்டுகளுக்கு ஏரி நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஏரி நிரம்பியது
சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக சேர்வராயன் மலைத்தொடரில் இருந்து உருவாகும் சரபங்கா நதியில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சரபங்கா நதியில் கூடுதல் நீர்வரத்தால், எடப்பாடி அடுத்த வேப்பம்பட்டி பகுதியில் உள்ள ஏரி நிரம்பியது.
பின்னர் அங்கிருந்து உபரி நீர் கால்வாய் வழியாக வெளியேறி அருகில் உள்ள சின்னேரி மற்றும் குண்டியாம்பட்டி ஏரிகளில் நிரம்பி வருகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில் சுமார் 120 ஏக்கர் பரப்பளவு உள்ள குண்டியாம்பட்டி ஏரி தனது முழு கொள்ளளவை எட்டி, நிரம்பி உள்ளது. அதன் உபரிநீர் மறுகால் வழியாக பாய்ந்தோடுகிறது.
விவசாயிகள் மகிழ்ச்சி
சுமார் 40 ஆண்டுகளாக வறண்டு கிடந்த இந்த ஏரி தற்போது நீர் நிறைந்து நிரம்பி வழிவதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். மேலும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியின் மூலம் அருகில் உள்ள நாச்சிபாளையம், சவுரிபாளையம், வெத்தலக்காரன் காடு, வெள்ள நாயக்கன்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் உள்ள விவசாய நிலங்கள் மீண்டும் பாசன வசதி பெறும்.
மேலும் இந்த ஏரி நிரம்பி வழிவதால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர வாய்ப்புள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.