< Back
மாநில செய்திகள்
சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற தொழிலாளி... சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி
மாநில செய்திகள்

சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற தொழிலாளி... சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி

தினத்தந்தி
|
26 July 2024 3:03 AM IST

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த தொழிலாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு வழங்கியது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகா பிரம்மதேசம் அருகே உள்ள டி.நல்லாளம் கிராமம் தைலந்தோப்பு தெருவை சேர்ந்தவர் ராசையன் மகன் மகேந்திரன் (வயது 42). தொழிலாளி.

மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் 10 வயதுடைய சிறுமி. இவர் கடந்த 2019-ல் அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 3.8.2019 அன்று சிறுமி, தனது வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது மகேந்திரன், அந்த சிறுமியிடம் சென்று மீன் பிடிக்கச் செல்லலாம் என்றுகூறி அப்பகுதியில் உள்ள குட்டைக்கு அழைத்துச்சென்றார்.

பின்னர் அங்குள்ள ஒரு மறைவான இடத்தில் வைத்து அந்த சிறுமியை மகேந்திரன் பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் அவர் அந்த சிறுமியை அங்குள்ள குட்டை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்து அங்கேயே போட்டுவிட்டு சென்றார்.

இச்சம்பவம் குறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் மகேந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று பரபரப்பு தீர்ப்பு கூறப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வினோதா, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றத்திற்காக மகேந்திரனுக்கு சாகும் வரை சிறை தண்டனையும், ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்தும், மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் இழப்பீடாக ரூ.7 லட்சம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட மகேந்திரன், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல்கள் கலா, சுமதி ஆகியோர் ஆஜராகினர்.

மேலும் செய்திகள்