சினிமா செய்திகள்
தி கேரளா ஸ்டோரி படம்; தமிழக திரையரங்குகளில் இன்று முதல் தடை
சினிமா செய்திகள்

தி கேரளா ஸ்டோரி படம்; தமிழக திரையரங்குகளில் இன்று முதல் தடை

தினத்தந்தி
|
7 May 2023 2:57 PM IST

தி கேரளா ஸ்டோரி படம் கடும் எதிர்ப்பால், தமிழக திரையரங்குகளில் இன்று முதல் திரையிடப்படாது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

இயக்குநர் சுதீப்தோ சென் இயக்கத்தில், விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் தி கேரளா ஸ்டோரி என்ற பெயரில் உருவான திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்தது. நடிகைகள் அதா சர்மா, யோகித பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பலானி உள்ளிட்டோர் முக்கிய வேடமேற்று நடித்து உள்ள இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்றும் அதன்பின் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் தங்களை இணைத்து கொண்டனர் என்றும் காட்டப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த படத்துக்கு தடை விதிக்க கோரி, கேரளாவில் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், இந்த படம் தமிழக திரையரங்குகளில் கடந்த 5-ந்தேதி வெளியானது.

தமிழகத்தில் இந்த படம் திரையிட அனுமதிக்க கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னையில் அண்ணாநகர், அமைந்தகரை, ராயப்பேட்டை, வேளச்சேரி, வடபழனி ஆகிய இடங்களில் உள்ள வணிக வளாகங்களில் இயங்கும் திரையரங்குகளிலும், மதுரவாயலில் உள்ள ஒரு பிரபல திரையரங்கிலும் என 7 இடங்களில் இந்த படம் வெளியானது. இதில், மாலை மற்றும் இரவு நேர காட்சிகள் மட்டும் திரையிடப்பட்டன.

ஏற்கனவே இந்த படத்தின் டீசருக்கு இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இதனால், இந்த படத்துக்கு தமிழகத்தில் தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்று மாநில உளவுத்துறை அரசுக்கு பரிந்துரை வழங்கி இருந்தது. ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடியானதால் இந்த திரைப்படம் திட்டமிட்டப்படி திரைக்கு வந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக தென் தமிழகத்தில் இந்த படம் திரையிடப்படவில்லை.

இந்த திரைப்படங்கள் வெளியாகும் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது உள்பட முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகள் தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சுற்றறிக்கை வெளியிட்டார். அதன்படி இந்த திரைப்படம் வெளியான திரையரங்குகள் முன்பு போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். ரசிகர்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த திரைப்படத்திற்கு தடை கோரி சென்னையில் பல இடங்களில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று திரையரங்குகள் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. சென்னை அமைந்தகரையில் நடைபெறும் போராட்டத்தில் சீமான் பங்கேற்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் படம் தடை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் 4 திரையரங்குகள் அருகிலும், த.மு.மு.க. சார்பில் 2 திரையரங்குகள் அருகிலும், இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் ஒரு திரையரங்கு அருகேயும் என 7 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

படத்துக்கு எதிராக இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள் போராட்ட அறிவிப்பால் சில தியேட்டர்களில் இந்த திரைப்படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

கோவையின் முக்கிய சாலையில் உள்ள வணிக வளாகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானபோது, இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தியேட்டரை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் பேசும்போது, மதம் இருந்தால் போதும் என்று பா.ஜ.க. நினைக்கிறது. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான மனநிலையை அவர்கள் உருவாக்குகிறார்கள் என குற்றச்சாட்டாக கூறினார்.

தொடர்ந்து அவர், ஒவ்வொரு தேர்தலின்போதும் சர்ச்சைகள் நிறைந்த படங்கள் திரையிடப்படுகின்றன. கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், தி கேரளா ஸ்டோரி படம் வெளிவந்து உள்ளது. 2024 மக்களவை தேர்தலுக்காக திப்பு என்ற படம் தயாராகி கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்.

அவரது கட்சியினர் திரையரங்கிற்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் பிடித்து சென்றனர். படம் தடை செய்யப்பட வேண்டும் என கோரி, கொடி பிடித்தபடியும், கோஷம் எழுப்பியபடியும் இருந்தனர். திரையரங்கு உரிமையாளர்களிடமும் படம் வெளியிட வேண்டாம் என கேட்டு கொண்ட சீமான், மக்களையும் படம் பார்க்க செல்ல வேண்டாம் என கேட்டு கொண்டார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் படம் வெளியிடப்படாமல், அந்தந்த அரசுகள் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோளாக கேட்டு கொண்டார். தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தமிழகம் முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பால், தமிழக திரையரங்குகளில் இன்று முதல் அந்த படம் திரையிடப்படாது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

எனினும், பயங்கரவாத சதி திட்டங்களை பற்றிய விசயங்களை வெளிக்கொண்டு வந்ததற்காக, பிரதமர் மோடி இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்த அதேவேளையில், மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இந்த படத்திற்கு மாநிலத்தில் வரி விலக்கும் அளித்து உள்ளார்.

மேலும் செய்திகள்