< Back
மாநில செய்திகள்
குறுவை தொகுப்பு திட்டத்தை கறம்பக்குடி பகுதிக்கும் வழங்க வேண்டும்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

குறுவை தொகுப்பு திட்டத்தை கறம்பக்குடி பகுதிக்கும் வழங்க வேண்டும்

தினத்தந்தி
|
24 July 2023 11:23 PM IST

டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் குறுவை தொகுப்பு திட்டத்தை கறம்பக்குடி பகுதிக்கும் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

குறுவை சாகுபடி

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள 12 ஊராட்சிகள் காவிரி பாசன பகுதிகள் ஆகும். தஞ்சாவூர் மாவட்ட எல்லை அருகே உள்ள இந்த பகுதியில் டெல்டா பாசன விவசாயத்தை ஒட்டியே குறுவை மற்றும் சம்பா சாகுபடி பணிகள் நடைபெறுவது வழக்கம். தற்போது இந்த பகுதியில் உள்ள கல்லணை கால்வாய்களில் குறைவான அளவே தண்ணீர் வருகிறது. இருப்பினும் கடந்த ஆண்டை போல் தொடர்ந்து தடையின்றி தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சுமார் 8 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன.

தொகுப்பு திட்டம் வேண்டும்

இந்நிலையில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தற்போது வழங்கப்படுகிறது. இதன்படி ஏக்கருக்கு 45 கிலோ யூரியா, 50 கிலோ டி.ஏ.பி., 25 கிலோ பொட்டாஷ் போன்றவை முழு மானியத்தில் வழங்கப்பட்டு உள்ளது. இதை தவிர மானிய விலையில் நெல் விதைகள், பசுந்தாள் உரம், இடுபொருட்கள் போன்றவையும் இத்திட்டத்தில் உள்ளன. மாற்று பயிர் சாகுபடிக்கான மானியமும் குறுவை சாகுபடி தொகுப்பில் உள்ளது.

ஆனால் இந்த குறுவை தொகுப்பு திட்டம் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படுவது இல்லை. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தோடு இணைந்து குறுவை சாகுபடி செய்யும் கறம்பக்குடி பகுதி விவசாயிகளுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படாதது வேதனை அளிப்பதாக விவசாயிகள் குமுறுகின்றனர். அடுத்த கிராமம், அடுத்த வயல் பகுதி விவசாயிகள் அரசின் மானிய திட்டத்தை அனுபவிக்கும் நிலையில் உணவு பொருள் உற்பத்தியில் தங்கள் பங்களிப்பை கடமை தவறாமல் செய்துவரும் கறம்பக்குடி பகுதி விவசாயிகளுக்கும் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பொன்னுசாமி கூறுகையில், தமிழ்நாடு அரசின் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தை புதுக்கோட்டை மாவட்ட காவிரி பாசன விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் என கடந்த 3 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. பல பகுதிகளுக்கு இன்னும் முழுமையாக தண்ணீர் செல்லவில்லை.

இருப்பினும் பலர் நம்பிக்கையுடன் சாகுபடி செய்துள்ளனர். நடவு செய்து 15 நாட்களுக்குள் அடி உரம் இட வேண்டிய அவசியம் உள்ளது. எனவே குறுவை தொகுப்பு சாகுபடி திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வதற்கான கெடுவை ஆகஸ்டு 15-ந் தேதி வரை நீட்டித்து. அதில் கறம்பக்குடி பகுதி காவிரி பாசன விவசாயிகளுக்கும் குறுவை தொகுப்பு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்