< Back
மாநில செய்திகள்
கனியாமூர் கலவரத்துக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கனியாமூர் கலவரத்துக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

தினத்தந்தி
|
13 Aug 2022 11:30 PM IST

கனியாமூர் பள்ளியில் நடந்த கலவரத்துக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொல்.திருமாவளவன் எம்.பி.பேசினார்

கள்ளக்குறிச்சி

ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மர்மமான முறையில் இறந்த மாணவி ஸ்ரீமதி மரணத்துக்கு நீதி கேட்டும், பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை விடுவிக்க கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கள்ளக்குறிச்சி-துருகம் சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., முதன்மை செயலாளர்கள் பாவரசு, உஞ்சையரசன், மாவட்ட செயலாளர் தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கி கண்டன உரையாற்றியதாவது:-

பெற்றோரிடம் ஆறுதல் கூறினேன்

மாணவி ஸ்ரீமதி 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து இறந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு பெண் சாவில் சந்தேகம் இருந்தால் பிரேத பரிசோதனையின் போது அந்தப் பெண் கற்பழிக்கப்பட்டுள்ளாரா? என பரிசோதனை செய்ய வேண்டும். ஆனால் ஸ்ரீமதியின் உடலை அதுமாதிரியான பரிசோதனை செய்யவில்லை.

எனவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் பிரேத பரிசோதனை செய்த டாக்டரிடம் விசாரணை செய்ய வேண்டும். ஆனால் விசாரணை செய்யவில்லை.

மாணவி ஸ்ரீமதி இறந்ததை கேள்விப்பட்டதும் அந்த கிராமத்துக்கு நேரடியாக சென்று மாணவியின் பெற்றோரிடம் ஆறுதல் கூறி வந்தேன். ஆனால் மாணவியின் இறப்புக்கு பா.ஜ.க. இரங்கல் கூட தெரிவிக்கவில்லை.

பொய்வழக்கு

அதேபோல் பள்ளி தாளாளரின் 2 மகன்கள், விடுதி பாதுகாவலர், காவலாளி மற்றும் மாணவியை மருத்துவமனைக்கு ஏற்றி சென்ற டிரைவர் ஆகியோரிடம் ஏன் இதுவரை விசாரணை செய்யவில்லை. ஸ்ரீமதியின் மரணத்தை பற்றி பேசாமல் பள்ளியில் நடந்த கலவரத்தை யார் செய்தார்கள்? எந்த சாதி செய்தது? என அதைப்பற்றி தான் பேசுகிறார்கள்.

கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் மீது பொய்யான வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சாதிக்காக போராடும் கட்சியில்லை. சாதி, மதம் பார்க்காமல் நீதிக்காக போராடும் கட்சி ஆகும். பள்ளியில் பஸ்கள் மற்றும் பொருட்கள் எரிந்தால் காப்பீடு செய்து வாங்கிக் கொள்ளலாம்.

அதேபோல் மாணவர்களின் சான்றிதழ்கள் எரிந்தால் புதிதாக வாங்கிக் கொள்ளலாம். ஆனால் இறந்து போன மாணவியின் உயிர் திரும்ப வருமா? ஏன் இந்த சம்பவத்தை பள்ளி நிர்வாகமே செய்திருக்கக் கூடாது.

விடுதலை செய்ய வேண்டும்

இந்த பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சிக்கு இடம் கொடுத்துள்ளார்கள். எனவே அந்த பள்ளியின் மீது அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மாணவி இறப்பு சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ளவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

பொய் வழக்கில் கைது செய்துள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும். அவர்களின் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்பப்பெற வேண்டும்.

மாணவி ஸ்ரீமதியின் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும், மாணவி குடும்பத்தினருக்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும். பள்ளியில் நடந்த கலவரத்துக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை.

கண்காணிப்பு குழு

சில தனியார் பள்ளிகளில் விடுதிகள் உரிய அனுமதி இல்லாமல், அடிப்படை வசதிகள் இல்லாமலும் நடைபெறுகிறது. முறைகேடுகளும் நடைபெறுகிறது. இதை தடுக்க கண்காணிப்பு குழு அமைத்து மாதந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ராமமூர்த்தி, செய்தி தொடர்பாளர் அனிச்சமலரவன், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணை செயலாளர் பொன்னிவளவன், கருத்தியல் பரப்பு மாநில துணை செயலாளர் பாசறைபாலு, தொண்டரணி மாநில துணை செயலாளர் கூத்துக்குடி பாலு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்