மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பட்டா வழங்கியதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிய விவகாரம்: சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
|மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பட்டா வழங்கியதை எதிர்த்து பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பஞ்சாயத்து தலைவர், நேரில் ஆஜராகும்படி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பட்டா வழங்கியதை எதிர்த்து பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றிய விவகாரத்தில், கடலூர் மாவட்டம், நைனார்குப்பம் கிராம பஞ்சாயத்து தலைவர் நேரில் ஆஜராகும்படி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், வடலூரை அடுத்த நைனார்குப்பம் கிராமத்தில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அரசு நிலம் ஒதுக்கி, அதற்கான பட்டாவையும் வழங்கியது. இந்த பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் கிராம பஞ்சாயத்து தலைவர் மோகன், மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளார். கடந்த மே மாதம் அளிக்கப்பட்ட அந்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் பஞ்சாயத்து தலைவர் மோகன் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கை மனுவில் இருந்து, அவர் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை கொண்டுள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது.
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பட்டா வழங்கியதற்கு எதிராக கிராம பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றிய செயல், அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது மட்டுமல்லாமல், அடிப்படை உரிமைகளை மீறிய செயல். இந்த தீர்மானம் நிறைவேற்றியது குறித்து மனுதாரரான கிராம பஞ்சாயத்து தலைவர் மோகன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்.
மேலும், எந்த சட்டத்தின் அடிப்படையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, மாவட்ட கலெக்டருக்கு மனு அளிக்கப்பட்டது என்பது குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.