சேலம்
போதையில் இருந்த தொழிலாளி மயங்கி விழுந்து சாவு
|போதையில் இருந்த தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தார்
எடப்பாடி:-
எடப்பாடி அருகே இன்னொரு சோகமாக போதையில் இருந்த தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தார். இதனால் மதுபிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தொழிலாளி மயக்கம்
சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த ஒக்கிலிபட்டி தண்ணிதாசனூர் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 55), கரும்பு வெட்டும் தொழிலாளி. இவருக்கு லதா என்ற மனைவியும், சரவணன் என்ற மகனும், சங்கீதா என்ற மகளும் உள்ளனர். சங்கீதாவுக்கு திருமணம் ஆகி எடப்பாடியை அடுத்த பெருமாள்கோவில் காலனி பகுதியில் வசித்து வருகிறார்.
காளியப்பன், நேற்று முன்தினம் இரவு மகள் சங்கீதா வீட்டுக்கு மதுபோதையில் வந்துள்ளார். அங்கு அவர் மயக்கம் வருவதாக கூறி படுத்துள்ளார். சிறிது நேரத்தில் காளியப்பன் வாயில் இருந்து நுரை தள்ளிய நிலையில் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்துள்ளார்.
சாவு
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சங்கீதா, தன்னுடைய தம்பி சரவணனுக்கு தகவல் தெரிவித்தார். உடனே காளியப்பனை எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், காளியப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், காளியப்பன், எடப்பாடி பகுதியில் ஒரு மதுக்கடையில் நேற்று முன்தினம் மாலையில் மது அருந்தியது தெரிய வந்தது. எடப்பாடி அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுகுடித்த ஒருவர் பலியான பரபரப்பு அடங்குவதற்கு முன்பு, மது குடித்த இன்னொருவர் இறந்த சம்பவம் எடப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போலி மது விற்பனை?
எடப்பாடி பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்குள் மது குடித்த 2 பேர் இறந்துள்ள சம்பவத்தால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே இந்த பகுதியில் உள்ள மதுக்கடையில் போலி மது விற்பனை செய்யப்படுகிறதோ என்ற அச்சம் மது பிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.