மயிலாடுதுறை
நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி
|2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என கி.வீரமணி பேசினார்.
பொறையாறு:
தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவிலில் திராவிடர் கழக பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். திராவிடர் கழக பொது செயலாளர் துரை.சந்திரசேகரன், நிவேதா முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.க.மாவட்ட செயலாளர் தளபதிராஜ் வரவேற்றார். இதில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், குலத்தொழிலை திணிக்கும் மத்திய அரசின் விஸ்வகர்மா சதித்திட்டத்தை எதிர்த்து போராடி வருகிறோம். குலத்தொழிலை திணிக்கும் சதித்திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த முடியாது. சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து அதற்கு சமூக நீதிக்கு பங்கை கொடுத்து சாதியை ஒழிக்க வேண்டும் என்பது தான் திராவிட மாடல் ஆட்சி. 2024-ம் ஆண்டு தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா கட்சி, மோடியின் ஆட்சி படுதோல்வியை சந்திக்கும் என்றார். கூட்டத்தில் தி.மு.க. தஞ்சை மண்டல தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், அமுர்த விஜயகுமார், அப்துல்மாலிக் மற்றும் திராவிடர் கழகத்தினர், தி.மு.க.வினர் ம.தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர்.