கோவையில் 2வது நாளாக வருமான வரி துறையினர் தொடர் சோதனை
|கோவையில் 7 இடங்களில் வருமான வரி துறையினர் தொடர் சோதனை நடத்திவருகின்றனர்.
கோவை,
சென்னை, கோவை, கரூர் மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு, கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் ஆந்திர மாநிலம் ஐதராபாத் உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அரசு ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் இந்த சோதனை நடந்தது. கோவையில் கோல்டு வின்ஸ், பொள்ளாச்சி, சவுரிபாளையம், ரேஸ்கோர்ஸ், தொண்டாமுத்தூர் உள்பட 7 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. கோவை கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள தி.மு.க பிரமுகர் செந்தில் கார்த்திகேயன் வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடந்தது.
நேற்று காலை தொடங்கிய சோதனையானது நள்ளிரவை தாண்டியும் நீடித்தது. சோதனை நடைபெறுவதை அறிந்ததும் ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் அவரது வீட்டின் முன்பு குவிந்தனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். நள்ளிரவு வரை சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் அதன்பின்னர் சென்று விட்டனர்.
இந்த நிலையில், இன்று காலை 2-வது நாளாக செந்தில் கார்த்திகேயன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். 10-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவரது வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையையும் தீவிரமாக சோதனை செய்தனர். மேலும் வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணையும் மேற்கொண்டனர்.
இதேபோல் பொள்ளாச்சி அருகே தம்மம்பதி கிராமத்தில் உள்ள அரவிந்த் என்பவரின் பண்ணை வீடு மற்றும் பொள்ளாச்சி அடுத்த பனப்பட்டியில் உள்ள சங்கர் ஆனந்த் என்பவருக்கு சொந்தமான கல்குவாரியிலும் 2-வது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் ரேஸ்கோர்ஸ், காளப்பட்டி, தொண்டாமுத்தூர், சவுரிபாளையம் உள்பட 7 இடங்களில் இன்று 2-வது நாளாக சோதனை நடந்தது. இந்த சோதனையில் 40-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.