< Back
மாநில செய்திகள்
மதுக் கடைகளை காலை 7 மணிக்கே திறப்பது என்ற யோசனையை கைவிடவேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
மாநில செய்திகள்

மதுக் கடைகளை காலை 7 மணிக்கே திறப்பது என்ற யோசனையை கைவிடவேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

தினத்தந்தி
|
12 July 2023 3:25 PM IST

மதுக் கடைகளை காலை 7 மணிக்கே திறப்பது என்ற யோசனையை கைவிடவேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

மதுக் கடைகளை காலை 7 மணிக்கே திறப்பது என்ற யோசனையை கைவிடவேண்டும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எதிர்க்கட்சியாக இருக்கும்போது மதுக்கடைகளின் எண்ணிக்கையினை குறைக்க வேண்டும், மதுக்கடைகளின் நேரத்தை குறைக்க வேண்டும் என்று கூறிய தி.மு.க., 2016 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளித்த தி.மு.க., மது விற்பனையினால் விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்று கூறிய தி.மு.க., இப்போது மதுக்கடைகளை காலை 7-00 மணி முதலே திறக்க யோசித்துக் கொண்டிருப்பதாக வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் கூறியிருப்பது தி.மு.க.வின் சுயரூபத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

சட்டம்-ஒழுங்கு சீரழிவினால் மக்கள் பாதிப்புக்குள்ளாகி இருப்பதைப் பற்றி கவலைப்படாத தி.மு.க., தக்காளி விலை உயர்வினால் தவித்துக் கொண்டிருக்கிற மக்களைப் பற்றி கவலைப்படாத தி.மு.க., சின்ன வெங்காயத்தின் விலை உயர்வினால் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிற மக்களைப் பற்றி கவலைப்படாத தி.மு.க., மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, வழிகாட்டி மதிப்பு உயர்வு, பதிவுக் கட்டண உயர்வு என பல உயர்வுகளினால் உற்சாகம் இழந்துள்ள மக்களைப் பற்றி கவலைப்படாத தி.மு.க., மது அருந்துபவர்களின் நலனைப் பற்றி கவலைப்படுவது மது அருந்துபவர்களை ஊக்குவிக்கும் செயலாகும்.

மது விலக்குத் துறை என்றாலே, மதுவை படிப்படியாக ஒழிப்பதற்கான நடவடிக்கையை எடுப்பதுதான். ஆனால், தி.மு.க. அரசோ மதுவை ஊக்குவிக்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. மக்கள் மது குடிப்பதை நிறுத்துவதன்மூலம் டாஸ்மாக் வருமானம் குறைந்தால் பிரச்சனை இல்லை என்று சொல்லும் வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர், மது அருந்துபவர்களில் நாற்பது விழுக்காட்டினரின் நலனுக்காக 90 மி.லி. மது பாக்கெட் அறிமுகம் செய்வது, காலை 7-00 -மணியிலிருந்து 9-00 மணி வரை டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டுமென்ற கடினமான பணி செய்யும் தொழிலாளர்களின் கோரிக்கையை பரிசீலிப்பது முதலானவை குறித்து தமிழ்நாடு அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக பேட்டி அளித்திருப்பது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது.

இது மட்டுமல்லாமல், மதுக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதன் காரணமாக, டாஸ்மாக் கடைகளில் தினமும் 150 கோடி ரூபாய்க்கு நடைபெற்றுக் கொண்டிருந்த விற்பனை தற்போது 110 முதல் 120 கோடி வரை மட்டுமே நடைபெறுவதாக ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். டாஸ்மாக் நிறுவனத்தின் வருமானம் குறைந்தால் பிரச்சனை இல்லை என்று சொல்லும் அமைச்சர், ஏன் தினசரி 40 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் குறைந்துவிட்டது என்று புலம்புகிறார். தி.மு.க. அரசினுடைய எண்ணமெல்லாம், மக்கள் மதுவைக் குடித்து அழிந்தாலும் பரவாயில்லை, அரசிற்கு வர வேண்டிய வருமானம் வந்து கொண்டே இருக்க வேண்டும், குறிப்பாக குடும்ப வருமானத்தில் இம்மியளவும் குறைவு ஏற்படக்கூடாது என்பதுதான்.

மக்களை எப்போதும் மயக்கத்திலேயே வைத்திருக்க வேண்டுமென்று தி.மு.க. அரசு நினைக்கிறது என்பது அமைச்சரின் பேட்டியிலிருந்து தெளிவாகிறது. மதுக்கடைகளை காலை 7-00 மணிக்கே திறப்பது என்ற தி.மு.க. அரசின் யோசனைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை நாட்டினை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும் செயல்.

மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, காலை 7-00 மணிக்கே மதுக் கடைகளை திறப்பது என்ற யோசனையை கைவிடவேண்டுமென்றும், படிப்படியாக மதுக்கடைகளை குறைத்து பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்