சென்னை
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்ற கணவன்
|நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கழுத்தை இறுக்கி கொலை செய்த கணவன், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள கானத்தூர் பழைய கரிக்காட்டுக்குப்பம் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்த பரத்துடு (வயது 52) என்பவர் தனது குடும்பத்தோடு தங்கி பராமரித்து வந்தார்.
இந்த நிலையில் மனைவியின் நடந்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி அவருடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த பரத்துடு, தனது மனைவி சுஜாதாவின் (48) கழுத்தை புடவையால் இறுக்கி கொலை செய்தார்.
பின்னர் தானும் பூச்சி மருந்து (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் மயங்கி கிடந்த அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அதேபோல் குன்றத்தூரை அடுத்த காலடிபேட்டை, அம்பேத்கர் குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (45). இவருடைய மனைவி அலமேலு (42). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அலமேலுவின் நடத்தையில் சந்தேகப்பட்ட ரமேஷ், அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்தார். நேற்று வழக்கம்போல் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த ரமேஷ், வீட்டில் இருந்த கடப்பாரையால் அலமேலுவின் தலையில் அடித்துக்கொன்றார். பின்னர் குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.