சேலம்
சேலத்தில் 10 மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட வங்காளதேச பெண்ணின் கணவரிடம் விசாரணை இன்று உடலை ஒப்படைக்க முடிவு
|சேலத்தில் 10 மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட வங்காளதேச பெண்ணின் கணவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இன்று உடலை ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
சேலம்,
அழகுநிலைய பெண் கொலை
சேலம் சங்கர் நகரில் அழகுநிலையம் நடத்தி வந்தவர் தேஜ்மண்டல் (வயது 27). வங்காளதேசத்தைச் சேர்ந்த இவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணையில், தேஜ்மண்டல் நடத்திய அழகுநிலையத்தில் வேலைபார்த்த வங்காளதேசத்தை சேர்ந்த லப்லு, நிஷி, மும்பையை சேர்ந்த ரிஷி உள்பட சிலருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
10 மாதங்களாக...
தேஜ்மண்டல் வெளிநாட்டை சேர்ந்தவர் என்பதால் அவரது உடலை இந்திய தூதகரம் மூலமாக உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தேஜ்மண்டலின் கணவர் முகமது ராக்கியிடம் (34) போலீசார் தொடர்பு கொண்டனர். அப்போது அவரிடம் சேலம் வந்து மனைவியின் உடலை பெற்றுக் கொள்ளுமாறு போலீசார் தெரிவித்தனர்.
ஆனால் பல்வேறு பிரச்சினை காரணமாக தேஜ்மண்டல் உடலை இந்தியா வந்து பெற்று செல்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் தேஜ்மண்டலின் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் கடந்த 10 மாதங்களாக பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
விசாரணை
இதனிடையே சேலத்தில் வேலை பார்த்து வரும் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் மூலம் மீண்டும் முகமது ராக்கியிடம் செல்போனில் வீடியோகாலில் பேசினர். மேலும் அவர் இந்தியா வருவதற்கான பண உதவி அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவுக்கு புறப்பட்ட முகமது ராக்கி நேற்று முன்தினம் மாலை சேலம் வந்தார். நேற்று அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு வந்த அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் மனைவி கொலை செய்யப்பட்ட இடத்தையும் அவர் பார்வையிட்டார்.
இன்று ஒப்படைப்பு
இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள தேஜ்மண்டலின் உடலை முகமது ராக்கியிடம் போலீசார் இன்று (செவ்வாய்க்கிழமை) காட்டுகின்றனர்.
அவர் அடையாளம் காட்டும் பட்சத்தில் உடனடியாக உடல் அவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. மேலும் தேஜ்மண்டல் உடல் சேலத்தில் உள்ள ஒரு சுடுகாட்டில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.