< Back
மாநில செய்திகள்
வேறொரு வாலிபருடன் பைக்கில் சென்ற காதல் மனைவியை நடுரோட்டில் ஓட ஓட வெட்டிய கணவன்..!
மாநில செய்திகள்

வேறொரு வாலிபருடன் பைக்கில் சென்ற காதல் மனைவியை நடுரோட்டில் ஓட ஓட வெட்டிய கணவன்..!

தினத்தந்தி
|
9 Jan 2024 7:32 AM IST

சென்னையில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

புதுவண்ணாரப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஹமத்துல்லா (வயது 35). பெயிண்டரான இவர், சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் தங்கி வேலை பார்த்து வந்தார். அதே பகுதியில் உள்ள காலணி தைக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்த திருவொற்றியூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சனாப் (24) என்பவரை காதலித்து வந்தார்.

இவர்கள் இருவரும் 2021-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 1½ வயதில் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 மாதங்களாக சனாப், கணவரை விட்டு பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

எனினும் கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இருவரும் அவ்வப்போது சந்தித்து பேசி வந்தனர். ஆனால் கடந்த 10 நாட்களாக கணவரிடம் பேச சனாப் மறுத்து வந்தார். இதனால் சந்தேகம் அடைந்த ரஹமத்துல்லா, மனைவிக்கு தெரியாமல் அவரை பின்தொடர ஆரம்பித்தார். அப்போது சனாப்புக்கு வேறொரு வாலிபருடன் கள்ளக்காதல் இருப்பது தெரிந்தது. அந்த வாலிபருடன் அவர் மோட்டார் சைக்கிளில் நெருக்கமாக அமர்ந்து செல்வதை பார்த்து ரஹமத்துல்லா அதிர்ச்சி அடைந்தார்.

இது பற்றி நேற்று மனைவி வேலை பார்க்கும் கம்பெனிக்கு சென்று அவரிடம் தட்டிக்கேட்டார். மேலும் ரஹ்மத்துல்லா, "நான் ஊருக்கு செல்கிறேன். நான் திரும்ப வருவதும், வராததும் உன் கையில் இருக்கிறது" என்றார். அதற்கு சனாப், "நீ இங்கே வரவேண்டாம். ஊரிலேயே தங்கி விடு" என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ரஹமத்துல்லா, இடுப்பில் மறைத்து வைத்து இருந்த இறைச்சி வெட்டும் கத்தியை எடுத்து மனைவி சனாப்பை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி பயங்கரமாக வெட்டினார். இதில் சனாப் தலை மற்றும் கழுத்து பகுதிகளில் பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்டதால் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதுபற்றி அங்கிருந்த பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விரைந்து சென்று சனாப்பை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சனாப், உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடலில் 25 இடங்களில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஹமத்துல்லாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்