< Back
மாநில செய்திகள்
விஷ சாராய விவகாரத்தை தொடர்ந்து வேகமெடுக்கும் மெத்தனால் வேட்டை
மாநில செய்திகள்

விஷ சாராய விவகாரத்தை தொடர்ந்து வேகமெடுக்கும் மெத்தனால் வேட்டை

தினத்தந்தி
|
24 Jun 2024 3:57 PM IST

போலீசாரிடம் சிக்கக்கூடாது என்பதற்காக மெத்தனால் கேன்களை தீயிட்டு எரித்தபோது, அவை பயங்கர சத்தத்துடன் வெடித்ததாக சாராய வியாபாரி கண்ணன் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் கிராமத்தில் விஷ சாராயம் குடித்த 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

தமிழகத்தையே பெரும் அதிா்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, ஓய்வுபெற்ற ஐகோா்ட்டு நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபா் ஆணையம் அமைக்கப்பட்டு, இச்சம்பவம் தொடா்பாக அவர் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி விவகாரத்தை தொடர்ந்து மெத்தனால் வேட்டை வேகமெடுத்து வருகிறது. மெத்தனால் பதுக்கல்காரர்களை போலீசார் அடுத்தடுத்து கைது செய்து வருகின்றனர். கருணாபுரத்தில் பலர் உயிரிழந்ததும், பதுக்கி வைத்திருந்த மெத்தனாலை உடனடியாக அழித்ததாக சாராய வியாபாரி கண்ணன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக கண்ணன் கூறும்போது, கேன்களில் இருந்த 100 லிட்டர் மெத்தனாலை ஆற்றில் கொட்டியதாகவும் அப்போது ஆற்று நீரில் ஆவி பறந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், மெத்தனால் கேன்கள் போலீசாரிடம் சிக்கக்கூடாது என்பதற்காக மெத்தனால் கேன்களை தீயிட்டு எரித்துள்ளார். அப்போது, அந்த கேன்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து தீ கொழுந்து விட்டு எரிந்ததாகவும் அதிலிருந்து உயிர்தப்பியதாகவும் கண்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்