கன்னியாகுமரி
ராட்சத பாறை உருண்டு விழுந்ததில் வீடு பலத்த சேதம்
|தொடர் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் ராட்சத பாறை உருண்டு விழுந்ததில் வீடு பலத்த சேதமடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக என்ஜினீயர் குடும்பத்தினர் உயிர் தப்பினர்.
குமரி மாவட்டம் குழித்துறை அருகே திருத்துவபுரத்தை அடுத்த தோப்புவிளை பகுதியில் மலைக்குன்று உள்ளது. இதன் அடிவாரத்தில் என்ஜினீயர் ஆனந்தராஜ் (வயது 38) என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இவர் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்.
இவருடைய மனைவி மஞ்சு. இந்தநிலையில் நேற்று காலை 8.15 மணிக்கு தொடர் மழையின் காரணமாக மலைக்குன்றில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள ராட்சத பாறை உருண்டபடி வந்து என்ஜினீயர் ஆனந்த்ராஜ் வீடு மீது விழுந்தது.
இதில் வீட்டின் ஒரு அறையில் கட்டிட சுவர் இடிந்து விழுந்து பலத்த சேதம் அடைந்தது அப்போது வீட்டின் மற்றொரு அறையில் இருந்த ஆனந்த்ராஜ், அவருடைய மனைவி மஞ்சு ஆகியோர் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்தனர். அங்கு வீட்டின் சுவர் இடிந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த அறை முழுமையாக இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதனை அறிந்த இருவரும் சுதாரித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர்.
மேலும் இதுகுறித்து ஆனந்த்ராஜ் பதற்றத்துடன் கூறுகையில், ராட்சத பாறை உருண்டு விழுந்ததில் சேதமடைந்த வீட்டின் அறையில் எப்போதும் என்னுடைய தாய் அம்பிகா (65) தூங்குவது வழக்கம். தற்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அவர் மட்டும் அந்த அறையில் இருந்திருந்தால் விபரீத சம்பவம் நடந்திருக்கும். நானும், மனைவியும் வேறு அறையில் இருந்ததால் உயிர் தப்பித்தோம் என தெரிவித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் விளவங்கோடு பஞ்சாயத்து தலைவி லைலா ரவி சங்கர், கவுன்சிலர் ரவிசங்கர் ஆகியோர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதருக்கு கொடுத்த தகவலின் பேரில் விளவங்கோடு கிராம நிர்வாக அலுவலர் சுமித்ரா சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ராட்சத பாறையை அகற்றும் பணியும் நடந்து வருகிறது.