நீலகிரி
பலத்த மழையால் வீடு இடிந்தது
|பந்தலூரில் பலத்த மழையால் வீடு இடிந்தது.
பந்தலூர் தாலுகா பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்கிறது. இதனால் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. குளிர் காரணமாக பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இந்தநிலையில் நேற்று பந்தலூர் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. பொன்னானியில் பாக்கு மரம் விழுந்ததில், மின் கம்பி சேதமடைந்தது. அம்மன்காவு பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி வழியாக சென்ற நாய், மின்சாரம் தாக்கி இறந்தது. மேலும் மின்தடை ஏற்பட்டதால் கிராமங்கள் இருளில் மூழ்கின. தொடர்ந்து பந்தலூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துகுமார் உத்தரவின் படி, மின் கம்பிகளை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்கிடையே உப்பட்டி அருகே அட்டியில் பெருமாள் என்பவரது வீடு இடிந்து சேதமடைந்தது. தகவல் அறிந்த பந்தலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் குரு, கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமார் வீட்டை பார்வையிட்டனர். தொடர்ந்து பெருமாளுக்கு ரூ.4,100 நிவாரணம் வழங்கினர். பந்தலூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் உள்ள சேரங்கோடு சோதனைச்சாவடி அருகே மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மரம் அகற்றப்பட்டது.