கரூர்
வீடு இடிந்து விழுந்து பொருட்கள் நாசம்
|வீடு இடிந்து விழுந்து பொருட்கள் நாசமானது.
கரூர் மாவட்டம், வேட்டமங்கலத்தில் உள்ள காலனியில் சின்னையன், பாப்பாத்தி தம்பதிக்கு கடந்த சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு தொகுப்பு வீடு வழங்கப்பட்டது. இந்நிலையில் அந்த தொகுப்பு வீட்டில் சின்னையனின் தம்பியான செல்லப்பன்-தனலட்சுமி தம்பதி வசித்து வந்தனர். தற்சமயம் செல்லப்பனின் மகன் பிரேம்குமார் அவரது பவித்ரா ஆகியோர் குடியிருந்து வந்தனர். இதில் பிரேம்குமார் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் பவித்ரா தனது 7 மாத குழந்தையுடன் தொகுப்பு வீட்டில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை பவித்ரா தனது குழந்தையுடன் வெளியே சென்று விட்டார். மாலை 3 மணி அளவில் வீட்டின் மேற்கூரையும், சுவர்களும் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த கட்டில், பீரோ, டிவி, துணிமணிகள் ஆகியவை நாசமாகின. இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், நாட்டமங்கலம் ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, பொக்லைன் உதவியுடன் இடிந்து விழுந்த சுவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பவித்ரா தனது குழந்தையுடன் வெளியில் சென்று இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியது குறிப்பிடத்தக்கது.