< Back
மாநில செய்திகள்
வீடு தீப்பற்றியதில் பொருட்கள் எரிந்து நாசம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

வீடு தீப்பற்றியதில் பொருட்கள் எரிந்து நாசம்

தினத்தந்தி
|
22 Feb 2023 12:13 AM IST

வீடு தீப்பற்றியதில் பொருட்கள் எரிந்து நாசமானது.

தீப்பற்றி எரிந்தது

பெரம்பலூர் அருகே குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் பின்புறம் உள்ள தோப்பு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 48). கொத்தனார். இவருக்கு லீலாவதி என்ற மனைவியும், 4 மகள்களும் உள்ளனர். அதில் மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. ராஜேந்திரன் தனது குடும்பத்தினருடன் அதே பகுதியில் கூரை வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு ராஜேந்திரன் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவு 1.20 மணியளவில் எதிர்பாராதவிதமாக வீட்டின் மேற்கூரை திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது.

உயிர் தப்பினர்

அப்போது திடுக்கிட்டு கண்விழித்த ராஜேந்திரன், வீடு தீப்பற்றி எரிந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக மனைவி மற்றும் 3 மகள்களை எழுப்பி, அவர்களை அழைத்து கொண்டு வீட்டிற்கு வெளியே ஓடி வந்தார். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதற்கிடையே தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது. ராஜேந்திரன் இதுகுறித்து அக்கம், பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் அங்கு வந்து தண்ணீரை ஊற்றி வீட்டில் எரிந்த தீயை அணைத்தனர்.

தீக்கிரையானது

இருப்பினும் வீடு முற்றிலும் எரிந்து தீக்கிரையானது. வீட்டில் இருந்த டி.வி., பீரோ, கிரைண்டர், மிக்சி, கட்டில், செல்போன் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் ஆகியவை தீயில் எரிந்து நாசமாயின. இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் குறிப்பாக கியாஸ் சிலிண்டர் வெடிக்காததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்