< Back
மாநில செய்திகள்
கூட்டாளியை சென்னையில் சுட்டுக்கொன்று உடலை துண்டுகளாக்கி தாமிரபரணியில் வீச்சு - பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் அரங்கேற்றிய பயங்கரம்
விருதுநகர்
மாநில செய்திகள்

கூட்டாளியை சென்னையில் சுட்டுக்கொன்று உடலை துண்டுகளாக்கி தாமிரபரணியில் வீச்சு - பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் அரங்கேற்றிய பயங்கரம்

தினத்தந்தி
|
23 Jun 2023 1:32 AM IST

ஒரு கும்பலை ஏவி, சென்னையில் தன் கூட்டாளியை சுட்டுக்கொன்றதுடன், உடலை எடுத்து வந்து துண்டுகளாக்கி தாமிரபரணியில் வீசிய பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இதை பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் அரங்கேற்றி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


ஒரு கும்பலை ஏவி, சென்னையில் தன் கூட்டாளியை சுட்டுக்கொன்றதுடன், உடலை எடுத்து வந்து துண்டுகளாக்கி தாமிரபரணியில் வீசிய பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இதை பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் அரங்கேற்றி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

வரிச்சியூர் செல்வம்

மதுரை அருகே வரிச்சியூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 54). இவர் மீது ஏற்கனவே கொலை, ஆள்கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.

பெரிய பெரிய தங்கச்சங்கிலிகளையும், நகைகளையும் அணிந்து ஒரு நடமாடும் நகைக்கடையாகவே நடமாடினார்.

வரிச்சியூர் செல்வம் என தமிழகத்தில் பிரபல ரவுடியாக வலம் வந்த அவர், கடந்த ஆண்டு ஒரு வீடியோவை வெளியிட்டு, "நான் ரவுடி அல்ல. சாதாரண மனிதனாக வாழ்கிறேன்" என்று கூறி இருந்தார். ஆனால், அந்த வீடியோ என்பது போலீசாரின் கவனத்தை திசைதிருப்ப அவர் நடத்திய நாடகம் என தற்போது தெரியவந்து இருக்கிறது.

இரட்டைக்கொலை வழக்கில் தன் நெருங்கிய கூட்டாளியான செந்தில்குமாரால் (38), தானும் போலீசில் சிக்கி விடக்கூடும் எனக்கருதி, அந்த கூட்டாளியை ஒரு கும்பல் மூலம் சென்னையில் சுட்டுக்கொன்று, உடலை கொண்டு வந்து கண்டந்துண்டமாக்கி தாமிரபரணி ஆற்றில் பல்வேறு இடங்களில் வீசிய பயங்கரம் தற்போது அம்பலமாகி இருக்கிறது. இதையடுத்து வரிச்சியூர் செல்வம் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

நடந்தது எப்படி?

இந்த பயங்கர சம்பவம் நடந்தது எப்படி? என்பது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் நெருங்கிய கூட்டாளியான செந்தில்குமார், விருதுநகர் அல்லம்பட்டி வீரராமன் தெருவைச் சேர்ந்தவர். இந்தநிலையில், வரிச்சியூர் செல்வத்துக்கும், செந்தில்குமாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன்காரணமாக இருவரும் பிரிந்தனர். எனவே செந்தில்குமார், தனது குடும்பத்துடன் விருதுநகரில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் 2020-ம் ஆண்டில் மதுரை அருகே குன்னத்தூர் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணராஜ் மற்றும் முனியசாமி ஆகிய 2 பேர் கொலை வழக்கில் போலீசார் தீவிரமாக துப்புதுலக்கி வந்தனர். அந்த கொலையில் செந்தில்குமாரை முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக போலீசார் சேர்த்தனர். ஒருவேளை செந்தில்குமார் போலீசாரிடம் சிக்கினால், அடுத்த நடவடிக்கையாக தானும் கைது செய்யப்படலாம் என வரிச்சியூர் செல்வம் கருதினார்.

இந்தநிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு உருவாகியதால், செந்தில்குமாரை கொன்றுவிடும் கொடூர திட்டத்தை வரிச்சியூர் செல்வம் தீட்டி இருக்கிறார்.

கதி என்ன?

இதற்கிடையே சமரசமாக ேபாவது ேபால் செந்தில்குமாரை அழைத்து பேசி, சென்னைக்கு சென்று ஒரு இடத்தில் தங்கி இருக்குமாறு கூறி இருக்கிறார். இதை நம்பிய செந்தில்குமார் சென்னை சென்றார். அதன்பின் அவர் திரும்ப வரவில்லை. அவரது கதி என்னானது? என்பதும் யாருக்கும் தெரியாமல் இருந்தது.

தன் கணவர் மர்மமான முறையில் மாயமானது பற்றி செந்தில்குமார் மனைவி முருகலட்சுமி விருதுநகர் கிழக்கு போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் தன் கணவரை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக்கோரி மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவும் முருகலட்சுமி தாக்கல் செய்தார். அதன்பேரில் செந்தில்குமாரை கண்டுபிடிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது.

சுட்டுக்கொலை

போலீசார் பல்வேறு இடங்களில் நடத்திய விசாரணையில் செந்தில்குமார் கடைசியாக சென்னை சென்றிருந்ததை உறுதி செய்தனர். அங்கு அவர் தங்கியதாக கூறப்படும் இடங்களில் ரகசியமாக விசாரணை நடத்தினர்.

அப்போதுதான், வரிச்சியூர் செல்வம் ஒரு கும்பலை ஏவி, பல மாதங்களுக்கு முன்பே செந்தில்குமாரை சென்னையில் சுட்டுக்கொன்றது பற்றிய தகவலும் வெளிவந்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் அதிரடியாக வரிச்சியூர் செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.

வீடியோ எடுத்து அனுப்பினர்

அப்போது, அவர் போலீசாரிடம் கூறிய தகவல்கள் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தன. சம்பவத்தன்று செந்தில்குமாரை சென்னையில் ஒரு இடத்தில் சிலர் பிடித்துக்கொள்ள, ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். சற்று நேரத்தில் ரத்த வெள்ளத்தில் செந்தில்குமார் பிணமானார். இந்தக்காட்சிகளை அப்படியே வீடியோவாக பதிவு செய்து வரிச்சியூர் செல்வத்துக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பினார்களாம்.

பின்னர், அந்த கும்பலிடம் செந்தில்குமாரின் உடலை ஒரு வாகனத்தில் ஏற்றி வரும்படி வரிச்சியூர் செல்வம் கூறி இருக்கிறார். அவர்களும் பெரிய போர்வையில் உடலை சுற்றி கொண்டு வந்திருக்கிறார்கள்.

நேராக நெல்லை மாவட்டத்துக்கு கொண்டு வந்து கண்டந்துண்டமாக உடலை வெட்டி இருக்கிறார்கள். எக்காரணம் கொண்டும் உடல் உறுப்புகள் போலீசாரிடம் கிடைத்துவிடக்கூடாது என எண்ணி ஒவ்வொரு பாகத்தையும் ஆற்றின் வெவ்வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்று வீசி தங்களது சதிச்செயலை செய்து முடித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் போலீசாரின் தீவிரமான விசாரணையில் சம்பவம் வெளியில் வெளிவந்து, அதன்மூலம் வரிச்சியூர் செல்வம் கைதாகி இருக்கிறார். அவர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

செந்தில்குமார் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார், செந்தில்குமாரின் செல்போன் மற்றும் பெல்ட் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய மற்றவர்களையும் விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்