சென்னை
வனத்துறை நிலம் பத்திரப்பதிவு: சார்பதிவாளருக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு
|தாம்பரத்தில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை பத்திரப்பதிவு செய்ததாக சார்பதிவாளருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
வனத்துறை நிலம்
சென்னை ஐகோர்ட்டில், சத்தியசந்தர், டி.வினோத்குமார் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில், தங்கள் மீதும், தாம்பரம் சார் பதிவாளர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
தாம்பரத்தில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை தமிழ்நாடு அரசு கிராமநத்தமாக மாற்றி 1996-ம் ஆண்டு டிசம்பர் 23-ந் தேதி அரசாணை வெளியிட்டது. அதன்படி அங்கிருந்த நிலத்தை குடும்பத்தினருக்கு எழுதி வைத்ததாகவும், பின்னர் அந்த நிலம் வேறு நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது என்றும், ஆனால், வனத்துறை நிலத்தை பத்திரப்பதிவு செய்துள்ளதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
சார்பதிவாளர் மீது வழக்கு
ஆனால், இந்த வழக்கின் விசாரணை அதிகாரி, வனத்துறை நிலத்தை வகை மாற்றி பிறப்பிக்கப்பட்ட அரசாணை உள்ளிட்ட ஆவணங்களை கேட்டு, காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டருக்கு கடந்த மார்ச் மாதம் தான் கடிதம் எழுதியுள்ளார்
இந்த வழக்கில் தாம்பரம் சார்பதிவாளர் வெங்கடசுப்பிரமணியன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவர், 2019-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை வனத்துறைக்கு சொந்தமான நிலம் என்று கூறப்படும் நிலத்தை 2 விற்பனை பத்திரங்கள் மற்றும் 4 சென்ட்டில்மென்ட் பத்திரங்களை பதிவு செய்துள்ளார். தற்போது அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் அரசு அதிகாரி என்பதால், இவர் மீதும், நிலத்தை பத்திர பதிவு செய்த மனுதாரர்கள் உள்ளிட்டோர் மீதும் அரசிடம் முறையான அனுமதி பெற்ற பின்னரே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கால அவகாசம்
தற்போது, இந்த வழக்கு ஆரம்பகட்ட நிலையில் உள்ளது. வனத்துறை நிலத்தை வகை மாற்றி அரசாணை பிறப்பிக்கப்பட்டதா? என்பது விசாரணையில் உள்ளது. வருவாய் துறையினரிடம் இருந்து உரிய பதிலும், ஆவணங்களும் வந்த பின்னரே அரசாணையின் உண்மைத்தன்மை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். அதற்கு போலீசாருக்கு சிறிது கால அவகாசம் தேவைப்படும்.
ஆனால், தங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே மனுதாரர்கள் இந்த ஐகோர்ட்டை அணுகியுள்ளனர். எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்.
இவ்வாறு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் தனது உத்தரவில் கூறினார்.