நெல்லையில் கொட்டி தீர்க்கும் கனமழை... வெள்ளநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் சபாநாயகர் அப்பாவு நேரில் ஆய்வு...!
|சபாநாயகர் அப்பாவு நெல்லை மாவட்டத்தில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளை நேரில் ஆய்வு செய்துள்ளார்.
நெல்லை,
தென்இலங்கை கடற்கரை பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது.
குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று இரவு தொடங்கிய கனமழை, தற்போது வரை நீடித்து வருகிறது. தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், சாலைகளில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
தொடர் மழை பெய்துவருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு நெல்லை மாவட்டத்தில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளை நேரில் ஆய்வு செய்துள்ளார். மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், 'நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டேன்!' என்று பதிவிட்டுள்ளார்.