< Back
மாநில செய்திகள்
பூட்டிய வீட்டுக்குள் காவலாளி மர்ம சாவு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

பூட்டிய வீட்டுக்குள் காவலாளி மர்ம சாவு

தினத்தந்தி
|
25 Sept 2023 12:15 AM IST

மகனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில் பூட்டிய வீட்டுக்குள் காவலாளி மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.

அருமனை,

மகனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில் பூட்டிய வீட்டுக்குள் காவலாளி மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.

காவலாளி

குலசேகரம் அருகே உள்ள கோட்டூர்கோணம் பகுதியை சேர்ந்தவர் ஜான்ரோஸ் (வயது 65). இவருடைய மனைவி ராணி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது.

ஜான்ரோஸ் அருமனை படப்பச்சை பகுதியில் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒருவரின் ரப்பர் தோட்டத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இதற்காக அந்த தோட்டத்தில் உள்ள வீட்டில் தங்கி இருந்தார். அவருடன் மனைவி ராணியும் சில நாட்களாக வசித்து வந்தார். ராணியின் கை முறிந்ததால் கட்டு போட்டபடி சிகிச்சையில் இருந்தார்.

திருமண நிச்சயதார்த்தம்

இந்தநிலையில் இவர்களது மகனுக்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுவதாக இருந்தது. இதனால் மனைவி ராணி நேற்று முன்தினம் அங்கிருந்து கோட்டூர்கோணத்தில் உள்ள வீட்டுக்கு புறப்பட்டார்.

அப்போது ஜான்ரோஸ், 'எனக்கு தோட்டத்தில் வேலை இருப்பதால் நிச்சயதார்த்தம் நடைபெறும் நாளன்று வீட்டுக்கு வருகிறேன்' எனக்கூறி மனைவியை வழியனுப்பி வைத்தார்.

இதையடுத்து ஜான்ரோஸ் நேற்று முன்தினம் மாலை வரை அக்கம் பக்கத்தினரிடம் பேசி விட்டு இரவு தூங்க சென்றார்.

பிணமாக கிடந்தார்

ஆனால் நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை தட்டி அழைத்தனர். கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. ஆனால் உள்ளிருந்து எந்த சத்தமும் வரவில்லை.

இதையடுத்து திறந்து கிடந்த ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது ஜான்ரோஸ் ரத்த வெள்ளத்தில் தரையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அருமனை போலீசாருக்கும், உறவினர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த மனைவி ராணியும், உறவினர்களும் பதறியடித்துக் கொண்டு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

இதற்கிடையே இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று உடலை பார்வையிட்டனர்.

மர்ம சாவு

மேலும் நாகர்கோவிலில் இருந்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் குக்கி வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய், பிணத்தை மோப்பம் பிடித்து கொண்டு அக்கம் பக்கத்தில் சுற்றி விட்டு மீண்டும் திரும்ப வந்து படுத்துக் கொண்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர்.

இதையடுத்து ஜான்ரோஸின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஜான்ரோஸின் மர்ம சாவு தொடர்பாக அருமனை ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யாரேனும் தாக்கியதில் இறந்தாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவத்தால் மகனுக்கு நேற்று நடைபெற இருந்த திருமண நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்பட்டது. பூட்டிய வீட்டில் காவலாளி பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்