< Back
மாநில செய்திகள்
கவர்னர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ். தலைமையிடமாக மாற்றுவதா? - கி.வீரமணி கண்டனம்
மாநில செய்திகள்

கவர்னர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ். தலைமையிடமாக மாற்றுவதா? - கி.வீரமணி கண்டனம்

தினத்தந்தி
|
10 Aug 2022 9:18 AM IST

கவர்னர் வீணான சர்ச்சைக்குரியவற்றை பேசுவதும், கவர்னர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ். தலைமையிடமாக மாற்றுவதுமான செயலில் ஈடுபட்டு வருகிறார் என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது,

தமிழகத்தின் கவர்னராக மத்திய அரசால் அனுப்பப்பட்டுள்ள ஆர்.என்.ரவி, தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஓராண்டிலேயே இந்தியாவின் 'நம்பர்-1' முதல்-அமைச்சர் என்ற புகழ்பெற்று வரும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி, அதன் கொள்கை திட்டங்களுக்கு முற்றிலும் எதிர்மறையான கருத்தை நாளும் பரப்பி, போட்டி அரசாங்கத்தினை நடத்தி வருகிறார்.

தேவையற்ற முரண்பாடான வகையில் தமிழ்நாட்டு மக்கள் வரி பணத்தில், வசதிகளுடன் ஆர்.எஸ்.எஸ். கொள்கை பிரசாரகராக நாளும் செயல்பட்டு வருகிறார் என்ற கண்டனங்கள் தமிழகத்தின் பல எதிர்க்கட்சி தலைவர்களால் அவ்வப்போது கூறப்பட்டும், அதுபற்றி அலட்சியமே காட்டுகிறார்.

கவர்னர் வீணான சர்ச்சைக்குரியவற்றை பேசுவதும், கவர்னர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ். தலைமையிடமாக மாற்றுவதுமான செயலில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில், நடிகர் ரஜினிகாந்த், "கவர்னரை சந்தித்து அரசியல் பேசினோம்; ஆனால், அதை வெளியிடமுடியாது'' என்று கூறியுள்ளது மற்ற தலைவர்கள் கவர்னர் மீது சாட்டிய குற்றச்சாட்டுக்கு தக்க ஆதாரமாகவும் அமைந்துள்ளது.

தமிழகத்தின் அனைத்து கூட்டணி மற்றும் அரசியல் சட்ட மாண்புகளை காக்க விரும்புவோர், முற்போக்காளர்கள் அனைவரும் ஒன்று திரண்டு வன்மையான கண்டனத்தை தெரிவித்து, அடுத்த கட்டத்தைப்பற்றி யோசிக்கவும் முன்வரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்